அரசியல்உள்நாடு

ஊடகங்களை அடக்குவதற்கு பொலிஸார் முயற்சி – சாகர காரியவசம் குற்றச்சாட்டு

போதைப்பொருளை ஒழிப்பதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் மீதே தற்போது போதைப்பொருள் குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுவதால், அந்த செய்தியை ஒளிபரப்பிய ஊடக நிறுவனத்தை அடக்குவதற்கு பொலிஸார் செயற்பட்டுள்ளனர்.

ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதற்கு முயற்சிக்கும் பொலிஸாரின் நடவடிக்கையை நாங்கள முற்றாக நிராகரிக்கிறோ மென பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தாா்.

பொதுஜன பெரமுன கட்சி காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

திருடர்களை கண்டுபித்து தண்டனை பெற்றுக்கொடுக்க அதிகாரத்தை வழங்குமாறு தெரிவித்தே ஜனாதிபதி உள்ளிட்ட மக்கள் விடுதலை முன்னணிஆட்சிக்கு வந்திருக்கிறது. ஆனால் இதுவரை அவர்கள் எந்த திருடனையும் பிடிக்கவில்லை.

அவர்களால் திருடர்களை கண்டுபிடிக்க முடியாமல் போனதை மறைப்பதற்காக 1990 காலப்பகுயில் இருந்து தலைதூக்கி வரும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை கையில் எடுத்துக்கொண்டு, அதனை முழுமையாக ராஜபக்ஷ்வினர் மீது குற்றம் சுமத்த நடவடிக்கை எடுத்தார்கள்.

ஆனால் அவர்களின் இந்த நடவடிக்கை, அவர்களுக்கு எதிராகவே திரும்பியுள்ளது.

நாட்டுக்குள் போதைப்பொருள் கொண்டுவருவது தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் என்பது மக்கள் முன்னிலேயே ஒப்புவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோன்று நாட்டில் போதைப்பொருள் விநியோகிப்பது, தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்தான் என்பதும் ஒப்புவிக்கப்பட்டிருக்கிறது.

இவை அனைத்துக்கும் மத்தியில் இறுதியாக, இந்த நாட்டில் கஞ்சா செடி வளர்ப்பதும் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள்தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

அதனால் தற்போது அரசாங்கத்தின் பால் திரும்பியிருக்கும் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டை தடுப்பதற்கு அரசாங்கம் தற்போது ஊடகங்களை அடக்குவதற்கு முயற்சிக்கிறது.

தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு உரித்தானது என தெரிவிக்கப்படும் காணியில் கஞ்சா செடி வளர்த்துவருவது தொடர்பான தகவல் வெளிவந்ததுடன் அதனை தனியார் ஊடகம் ஒன்று ஒளிபரப்பி இருந்தது.

இவ்வாறு ஒளிபரப்பியதற்கு எதிராக பொலிஸ் திணைக்களம் குறித்த ஊடக நிறுவனத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறது.

அதில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சொந்தமான காணியில் கஞ்சா பயிருடுவதாக உறுதிப்படுத்தப்படாத ஒரு விடயத்தை ஒளிபரப்பியதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆனல் குறித்த ஊடக நிறுவன செய்தி ஒளிபரப்பின்போது, சம்வத்துடன் தொடர்புபட்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்த வாக்குமூலத்தையே ஒளிபரப்பி இருந்தது.ஆனால் அந்த ஒளிப் பதிவை இலங்கை பொலிஸார் வெளிப்படுத்தாமல் மறைத்துள்ளனர்.

அதனையே குறித்த ஊடகம் வெளிப்படுத்தி இருந்தது. அம்பந்தோட்டையில் ஐஸ் போதைப்பொருளின் மூலப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டபோது, பொலிஸார் அதனை முழுமையாக ஒளிப்பதிவு செய்து ஊடங்கங்களுக்கு வெளியிட்டிருந்ததை நாங்கள் கண்டோம்.

ஆனால் கஞ்சா செடி பயிரிட்டிருப்பதை பொலிஸாரே ஒளிப்பதிவு செய்த காட்சிகளை அவர்கள் மறைத்தார்கள். ஆனால் குறித்த தனியார் ஊடகம் அந்த ஒளிப்பதிவை வெளியிட்டு, மக்களுக்கு இருக்கும் தகவல் அறியும் உரிமையை பாதுகாத்து இருக்கிறது. அதற்காக அந்த ஊடக நிறுவனத்துக்கு எமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

அதேபோன்று குறித்த பாராளுமன்ற உறுப்பினர் சுற்றிவளைப்புக்குச் சென்ற பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல் நடத்தியதாக பொய் செய்தி வெளியிட்டுள்ளதாகவும் பொலிஸாரின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாலே அவர் ஆரம்பத்தில் ஒரு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் வேறு ஒரு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

அவ்வாறு இல்லாமல் பொலிஸ் அதிகாரி பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவருடன் இருந்த 5பேருக்கு தனியாக இருந்து தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிப்பதாக இருந்தால், அதனை நம்புவதற்கு இந்த நாட்டு மக்கள் தயாராக இல்லை.

பொலிஸ் அதிகாரிதான் தாக்குதல் நடத்தி பொய் நாடகம் ஒன்றை அரங்கேற்றி இருந்தால், அவருக்கு துணைபோன வைத்தியசாலை அதிகாரிகளும் வைத்தியரும் அதற்கு சம்பந்தப்பட வேண்டும்.

அதனால் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய இலங்கை பொலிஸாக செயற்படுவதற்கு பதிலாக மக்கள் விடுதலை முன்னணியின் பொலிஸாக செயற்படுவதாகவே எமக்கு தோன்றுகிறது.

அதனால் உண்மை தகவல்களை மறைத்து செயற்படும் பொலிஸாரின் இந்த நடவடிக்கையை நாங்கள் நிராகரிக்கிறோம் என்றார்.

-எம்.ஆர்.எம்.வசீம்

Related posts

தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்பான செய்திகள் உண்மை இல்லை

ஜனாதிபதி செயலாளரின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடல்

editor

ஹொரண பிரதேச சபையின் பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் அதிரடியாக கைது!

editor