அரசியல்உள்நாடு

உள்ளூர் பெரிய வெங்காய விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு குறித்து கலந்துரையாடல்

உள்ளூர் பெரிய வெங்காய விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முறையான வேலைத்திட்டத்தை உருவாக்குவது குறித்து விவசாயிகளுடனான கலந்துரையாடல் இன்று (17) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

நெல் பயிற்செய்கை தொடர்பில் நீண்ட காலமாக கவனம் செலுத்தி நெல் விவசாயியைப் பாதுகாக்க ஒரு குறிப்பிட்ட திட்டம் வகுக்கப்பட்டுள்ள போதிலும், நாட்டில் ஏனைய பயிர்களுக்கு ஒரு குறிப்பிட்ட திட்டம் இதுவரை வகுக்கப்படவில்லை என்று அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்தார்.

உள்ளூர் பெரிய வெங்காய விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அரசாங்கமென்ற வகையில் ஒரு குறிப்பிட்ட திட்டம் தயாரிக்கப்படுவது இதுவே முதல் முறை என்றும், தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் அனைத்து விவசாயிகளையும் பாதுகாப்பதும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதும் ஆகும் எனவும் அவர் தெரிவித்தார்.

பெரிய வெங்காய விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் அதே வேளை, நுகர்வோருக்கு கொள்வனவு செய்யக் கூடிய விலைக்கு வெங்காயத்தைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குவதன் அவசியம் குறித்து இங்கு வலியுறுத்தப்பட்டது.

துல்லியமான தரவுகளின் அடிப்படையில் அது தொடர்பிலான முடிவுகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் கே.டி. லால்காந்த தெளிவுபடுத்தினார்.

பெரிய வெங்காய உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் விலை நிர்ணய பொறிமுறை குறித்து இதன் போது பரவலாக ஆராயப்பட்டது. உள்ளூர் பெரிய வெங்காய பயிற்செய்கை தொடர்பான நிலையான உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தலுக்கான மூலோபாயங்கள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பில் விவாசாயத் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையும் இங்கு முன்வைக்கப்பட்டது.

2025 ஆம் ஆண்டில் 17% ஆக இருந்த பெரிய வெங்காய உற்பத்தியை 2026 ஆம் ஆண்டில் 22% ஆகவும், 2027 ஆம் ஆண்டில் 27% ஆகவும் அதிகரிக்க திட்டமிடப்பட்ட செயற்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

விவசாயிக்கு அநீதி ஏற்படாத வகையில் பெரிய வெங்காயத்திற்கு நிலையான விலையை நிர்ணயிக்க அரசாங்கம் முடிவு செய்திருப்பதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டதோடு, களஞ்சியம் உட்பட விவசாயிகளின் வசதிகளை விரிவுபடுத்த எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து முக்கியமாக ஆராயப்பட்டது.

அதிக இடைவெளியுடன் கூடிய விலை ஏற்ற இறக்கங்கள் தாங்கள் எதிர்கொள்ளும் ஒரு பாரிய பிரச்சினை என்றும், அந்த ஆபத்தை எதிர்கொண்ட நிலையிலே தாம் பயிற்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் விவசாயிகள் சுட்டிக்காட்டினர்.

மேலும், அதிக வருமானம் ஈட்டக்கூடிய ஒரு துறையான பெரிய வெங்காய பயிற்செய்கையில் தொடர்ந்து ஈடுபட தேவையான வசதிகளை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

இந்தத் துறையில் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் சிறிய காணிகளில் பயிரிடுவதால், உற்பத்திச் செலவைக் கணக்கிடுவது போன்ற முடிவுகளை எடுக்கும்போது இந்தக் காரணியைக் கருத்தில் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் கே.டி. லால்காந்த இங்கு விளக்கினார்.

அவசர நிலைமைகளில் தேவையான தலையீடுகளை மேற்கொள்வதற்கு வாய்ப்பாக கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யுமாறு அனைத்து விவசாயிகளிடமும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு குறிப்பிட்ட திட்டத்தில் முதன்முறையாக தலையிட்டதற்காக அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த விவசாயிகள், தற்போதைய அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக குறிப்பிட்டனர்.

விவசாய மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி.பி. விக்கிரமசிங்க, ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் கபில ஜனக பண்டார, விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி டபிள்யூ.ஏ.ஆர்.டி. விக்ரமாராச்சி மற்றும் விவசாயத் திணைக்கள சிரேஸ்ட அதிகாரிகள், தம்புள்ளை மற்றும் கலென்பிந்துனுவெவவைச் சேர்ந்த பெரிய வெங்காய விவசாயிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விவசாயிகள் குழுவும் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

-ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Related posts

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல கைது

editor

முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அநுர காலமானார்

பயங்கரவாத தடைச்சட்டத்தை மறுசீரமைத்து அடிப்படைச் சுதந்திரத்தை உறுதிப்படுத்துங்கள் – சர்வதேச நாடுகள்