பெரும்பான்மை இல்லாத உள்ளூராட்சி மன்றங்களில் பெரும்பான்மையை ஏற்படுத்திக்கொள்ள முயற்சிப்பதற்கு முன்னர் அரசாங்கம் உள்ளூராட்சி மன்ற சட்டத்தை நல்ல முறையில் படித்துப்பார்க்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
தனித்து ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாத சபைகளில் அரசாங்கம் ஆட்சியமைப்பதற்கு எதிர்க்கட்சிகள் தடையாக இருக்கக்கூடாதென மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைக்கும்போது, செயற்படக்கூடிய சட்டம் ஒன்று இருக்கிறது.
அதனால் அரசாங்கம் தங்களுக்கு பெரும்பான்மை இல்லாத சபைகளுக்கு பெரும்பான்மையை ஏற்படுத்திக்கொள்ள முயற்சிப்பதற்கு முன்னர் அது தொடர்பான சட்டத்தை முறையாக வாசித்துப் பார்க்க வேண்டும்.
தேர்தலில் எந்தவொரு கட்சியும் அந்த பிரதேச உள்ளூராட்சி சபையில் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியாமல் போனால், அந்த சபைகளின் தலைவர் அல்லது மேயரை வாக்களிப்பின் மூலமே தெரிவுசெய்துகொள்ள வேண்டும்.
என்றாலும் அரசாங்கத்துக்கு பெரும்பான்மை அதிகாரம் இருக்கும் சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு எதிர்க்கட்சி என்ற வகையில் அவர்களுக்கு எந்த இடையூறுகளையும் மேற்கொள்ளப்போவதில்லை.
ஆனால் அரசாங்கத்துக்கு பெரும்பான்மை இல்லாத சபைகளில் ஆட்சியமைக்கும்போது எதிர்க்கட்சியில் ஏனைய உறுப்பினர்களின் ஆதரவை ஐக்கிய மக்கள் சக்திக்கு வழங்குவதற்கு அவர்கள் இணங்கி இருக்கின்றனர். அது தொடர்பான கலந்துரையாடல்களின் முன்னேற்றம் நூற்றுக்கு 90 சதவீதத்துக்கும் அதிகம் வெற்றியடைந்துள்ளது.
கொழும்பு மாநகர சபையை எடுத்துக்கொண்டால், அரசாங்கத்துக்கு 48 உறுப்பினர்களே இந்த தேர்தலில் கிடைக்கப்பெற்றது. ஐக்கிய மக்கள் சக்திக்கு அதன் கூட்டணி உறுப்பினர்களுடன் 46 உறுப்பினர்கள் தற்போது இருக்கின்றனர்.
அதேபோன்று கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைப்பதற்கு ஏனைய அரசியல் கட்சிகள் பல ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதாக வாக்குறுதியளித்துள்ளன.
கொழும்பு மாநகர சபையை ஐக்கிய மக்கள் சக்தியினால் மாத்திரமே வழிநடத்திச்செல்ல முடியும் என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
அதன் பிரகாரம் அரசாங்கத்துக்கு ஒரு சில சபைகளில் பெரும்பான்மை கிடைக்கப்பெறவில்லை என்பதுடன் மக்களின் வாக்குகளின் மூலம் பெரும்பான்மை பலம் பிரிந்து சென்றுள்ளதை இந்த முறை தேர்தலில் மிகவும் தெளிவாக காணக்கூடியதாக இருக்கிறது.
எனவே உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர் அல்லது மேயரை தெரிவு செய்யும்போது அந்த பதவி வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பது உள்ளூராட்சி மன்ற சட்டமாகும் என்பதை அரசாங்கம் தெரிந்துகொள்ள வேண்டும் என்றார்.
-எம்.ஆர்.எம்.வசீம்