2025 ஆகஸ்ட் 12ஆம் திகதி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ நாமல் ராஜபக்ச, கௌரவ டீ.வீ. சானக மற்றும் கட்சிப் பிரமுகர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தலைமையகத்திற்கு விஜயம் செய்து நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களுடன் சந்திப்பொன்றில் ஈடுபட்டனர்.
குறித்த தரப்பினரால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய இச்சந்திப்பு நடைபெற்றது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை சார்பில் அதன் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், உப தலைவர்கள், நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
வருகை தந்திருந்த பிரமுகர்களை வரவேற்று உரையாற்றிய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்கள் முதலில் சபையிலிருந்த நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் பற்றிய அறிமுகத்தை வழங்கியதுடன் நாடளாவிய ரீதியிலான ஜம்இய்யாவின் செயற்பாடுகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தினார்.
தொடர்ந்து உரையாற்றிய பொதுச்செயலாளர் அவர்கள் கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட சவால்கள், கோவிட் ஜனாஸா விடயத்தில் முஸ்லிம்கள் எதிர்கொண்ட அசௌகரியங்கள் மற்றும் இஸ்லாமிய வெறுப்பு போக்கு தொடர்பிலும் சுட்டிக் காட்டினார்.
மேலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களின் பெயர் குறிப்பிடப்பட்ட வீதியொன்று பலஸ்தீன மண்ணில் இருப்பதாகவும், பலஸ்தீன மக்களுக்கு நடக்கக்கூடிய அநியாயங்களுக்கெதிராக நீங்களும் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
அதனை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உரையாற்றுகையில், தனது அரசியல் கொள்கைகள், கட்சி நிலைப்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றி விளக்கியதுடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் இருந்த இணக்கம் மற்றும் அவர் ஆற்றிய சேவைகளையும் சுட்டிக்காட்டினார்.
மேலும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மேற்கொள்ளும் சகவாழ்வுத் திட்டத்தினையும் சகவாழ்வு மையங்களையும் பாராட்டி, இன, மத, மொழி வேறுபாடுகள் இல்லாத சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.
அதனை அடுத்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் உரையாற்றினார். அவர் தனது உரையில் ஜம்இய்யா ஓர் அரசியல் சார்பற்ற நிறுவனம் எனவும் சகவாழ்வு, ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்தி பிற மதஸ்தலங்களுக்கு எமது அமைப்பினர் பல கள விஜயங்களை மேற்கொண்டிருப்பதனை சுட்டிக்காட்டினார்.
மேலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் தனது ஆட்சிக் காலத்தில் நாட்டிற்கு ஆற்றிய சேவைகளையும் இலங்கையில் நிலவிய கொடிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததையும் நினைவு கூர்ந்தார்.
என்றாலும் பிற்பட்ட காலங்களில் ஆட்சிக்கு வந்தவர்களால் இந்த நாட்டு முஸ்லிம்கள் பல்வேறு விதமான அநீதிகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். அவற்றில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் உத்தியோகபூர்வ வழிகாட்டல்களை புறக்கணித்து, ஜனாஸா எரிப்பு விடயத்தில் ஜம்இய்யா அரச தரப்புடன் பல சந்திப்புக்களை நடாத்தியும் முஸ்லிம்களது உள்ளங்கள் பாதிப்புறும் வகையில் கோவிட் ஜனாஸாக்களை எரித்தமை, ஹலால் சான்றிதழுக்கு தடை விதித்தமை, முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்திருத்தம், முஸ்லிம்களுக்கெதிரான திட்டமிட்ட கலவரங்களை தடுக்காமை, இஸ்லாத்தை அவமதித்தவர்களை கண்டிக்காமல் உயர் பதவிகள் வழங்கி கௌரவித்தமை போன்ற விடயங்களை சுட்டிக் காட்டியதுடன் உரியவர்கள் உலக முஸ்லிம்களிடத்தில் இவற்றிற்காக மன்னிப்பு கோர முன் வரவேண்டும் என்றும் இளம் பாராளுமன்ற உறுப்பினராகிய தாங்கள் இவற்றிலிருந்து தகுந்த பாடங்களை கற்று முஸ்லிம்களது உள்ளங்கள் சாந்தப்படும் வகையில் இன, மதம் பாராது அரசியலில் ஈடுபடவேண்டும் எனவும் எடுத்துரைத்தார்.
அத்தோடு இஸ்லாத்தில் நிர்ப்பந்தம் இல்லை, பிற மத கடவுள்களை விமர்சிப்பது கூடாது, அவரவருக்கு அவரவர் மார்க்கம் என்ற இஸ்லாமிய கோட்பாடுகளை அல்-குர்ஆன் ஆதாரங்களோடு சுட்டிக்காட்டிய தலைவர் அவர்கள் ஜம்இய்யா அதற்காக மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடர்பிலும் விளக்கமளித்தார்.
ஜம்இய்யாவினால் வெளியிடப்பட்ட அல்-குர்ஆன் சிங்கள மொழி பெயர்ப்பு ‘විවෘත දෑසින් ඉස්ලාම්’, ‘සමාජ සංවාද’, ‘Don’t be extreme’, ‘மன்ஹஜ்’ (மார்க்க விவகாரங்களில் இலங்கை முஸ்லிம்களுக்கான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைப்பாடுகளும் வழிகாட்டல்களும்) ஆகிய நூல்கள் பற்றிய அறிமுகங்களை வழங்கியதுடன் அவற்றை தானும் வாசித்து ஏனையவர்களுக்கும் எத்திவைக்க வேண்டும் என வேண்டிக் கொண்டார்.
நிகழ்வின் இறுதியில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் வெளியிடப்பட்ட அல்-குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு உள்ளிட்ட ஏனைய சில வெளியீடுகளும் கையளிக்கப்பட்டன.
வீடியோ