அரசியல்உள்நாடு

உப்புத் தட்டுப்பாடு – காரணத்தை வெளியிட்டார் முஜிபுர் ரஹ்மான் எம்.பி

நாட்டில் உப்புத் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு புத்தளம் உப்பு கூட்டுத்தாபனத்தில் தனியார் வியாபாரத்திற்காக உப்பு பதுக்கி வைக்கப்பட்டுள்ளமையே காரணமாகும். அதனால் நுகர்வோர் அதிகார சபை புறக்கோட்டையில் உள்ள பெட்டிக்கடைகளில் சோதனை நடத்தாமல் அம்பாந்தோட்டை மற்றும் புத்தளத்திற்கு சென்று முடிந்தால் உப்பு எங்கே உள்ளது என்று பரிசோதனை செய்யட்டும் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) இடம்பெற்ற நிதிச் சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

தேசிய மக்கள் சக்தி ஆட்சியேற்று 7 மாதங்கள் கடந்துள்ளன. ஆனால் இன்னும் நாட்டில் சில உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்கு துரித தீர்வுகளை அரசாங்கத்தால் செய்ய முடியவில்லை. அண்மையில் அரிசி தொடர்பான பிரச்சினை வந்த போது, வரிகளை அறவிட்டு வெளிநாட்டில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் உப்பு பிரச்சினையும் ஏற்பட்டுள்ளது.

இது கடந்த 6 மாதங்களாக நிலவுகிறது. இவ்வாறான தட்டுப்பாடு ஏற்படும் என்று தெரியும். அது தொடர்பான தீர்மானங்கள் என்ன, ஏன் தட்டுப்பாட்டை தடுக்க முடியவில்லை என்பதனை கூற வேண்டும். அதனை விடுத்து மழை பெய்வதாலோ, முன்னாள் அரசாங்கத்தினாலோ இது ஏற்பட்டது என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

எவ்வாறாயினும் கடந்த 6 மாதங்களாக அரச உப்புக் கூட்டுத்தாபனத்தின் ஊடாகவே உப்பு இறக்குமதி செய்யப்பட்டது. அந்த உப்பு எங்கே? எந்த தனியார் துறைக்கும் உப்பு கொண்டுவர அனுமதி வழங்கவில்லை. அண்மையிலேயே அதற்கான அனுமதி வழங்கப்பட்டது. அப்படியென்றால் அரச உப்பு கூட்டுத்தாபனம் கொண்டுவந்த உப்பு எங்கே? ஏன் இந்த உப்பு சந்தைக்கு வரவில்லை. உப்பு கட்டிகளே கொண்டுவரப்பட்டன. இவை உப்பு வர்த்தகர்களுக்கு ஒப்படைக்கப்பட்டன. இதற்கு என்ன நடந்தது.

இந்தியாவில் உப்பு மெற்றிக் தொன் ஒன்றின் விலை 80 டொலர்களாகும். அதனை கொண்டுவரும் போது உப்பு கிலோவென்றுக்கு அரசாங்கம் 40 ரூபா வரியை அறவிடுகிறது. இதன்படி கிலோவொன்றுக்கான செலவு 24 ரூபாவாகும். சகல செலவுகளையும் சேர்த்தால் ஒரு கிலாே உப்பு 100 ரூபாவுக்கு வழங்கலாம். ஆனால் சந்தையில் 350 ரூபா முதல் 400 ரூபா வரையிலான விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது..

உப்பை பெற்றுக்கொள்பவர்கள் யார்? புத்தளம் உப்பு கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளராக இருக்கும் ரவி லியனகேவே ரைகம் நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார். அவரே இறக்குமதி செய்யப்படும் உப்பு தொகையை ரைகம் நிறுவனத்துக்கு கொண்டு சென்று 350 ரூபாவுக்கு விற்பனை செய்கின்றனர்.

உங்களின் முறை மாற்றம் புதுமையானது. முன்னர் 130 ரூபாவுக்கு விற்பனை செய்தவர்கள் இப்போது விலையை அதிகரித்துள்ளனர். அதேபோன்று கணக்காய்வாளர் நாயகம் ஒருவரை நியமித்துக்கொள்ள அரசாங்கத்துக்கு முடியாமல் இருகிறது. இந்த துறையில் 5வருடம் அனுபவமுள்ள பெற்றோலிய கூட்டத்தாகனத்தின் பணிப்பாளர் நாயகத்தை நியமிப்பதற்கே அரசாங்கம் முயற்சித்து வருகிறது.

எனவே நுகர்வோர் அதிகார சபை புறக்கோட்டையில் உள்ள பெட்டிக்கடைகளில் சோதனை நடத்தாமல் அம்பாந்தோட்டை மற்றும் புத்தளத்திற்கு சென்று முடிந்தால் உப்பு எங்கே உள்ளது என்று பரிசோதனை செய்யட்டும்.

-எம்.ஆர்.எம்.வசீம்

Related posts

சங்கக்காரவின் பதவிக்காலம் நீடிப்பு

மூன்றாவது அலையை தடுக்க பொறுப்புடன் செயல்படவும்

அவசரகால ஒழுங்கு விதிகள் தொடர்பான பிரேரணை மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்