கடமை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த சூரியகந்த பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது, இரத்தினபுரி மாவட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார உள்ளிட்ட குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளதாகக் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நேற்று (20) இரவு இடம்பெற்ற இத்தாக்குதலில் காயமடைந்ததாகக் கூறும் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், தற்போது எம்பிலிப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சூரியகந்த பொலிஸாரினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கஞ்சா சுற்றிவளைப்பு நடவடிக்கையில், தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் உத்தியோகத்தரும் கலந்துகொண்டிருந்தார்.
குறித்த கஞ்சா சுற்றிவளைப்பானது, தாக்குதலை மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினரின் மாமனாரது காணியில் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வாகனமொன்றில் வந்த பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் குழுவினர், “உன்னைக் கொல்வேன்” என மிரட்டித் தம்மீது தாக்குதல் நடத்தியதாக பொலிஸ் உத்தியோகத்தர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமாரவும் குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 16 ஆம் திகதி மாலை சூரியகந்த, புலுதொட்ட – வெலிஹார பகுதியில் மரவள்ளி மற்றும் சோளப் பயிர்ச்செய்கைக்கு மத்தியில் வளர்க்கப்பட்டிருந்த ஒன்றரை அடி மற்றும் ஒரு அடி உயரமான இரண்டு கஞ்சா செடிகளுடன் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் சூரியகந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
சந்தேக நபர் கஞ்சா செடிகளுடன் எம்பிலிப்பிட்டி நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் திலும் யூ. பெர்னாண்டோ முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவருக்கு 3,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.
இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டது சூரியகந்த, புலுதொட்ட, தலகஹவத்தை பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கே ஆகும்.
தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமாரவின் மனைவியின் தந்தைக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் இக்காணி, பயிர்ச்செய்கைக்காக சந்தேக நபரான குறித்த இளைஞருக்கு வழங்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
