நீங்கள் அனைவரும் அறிந்துள்ளமை போலவே, நான் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் விசேட தூதுவராக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கான விசேட செய்தியுடன் இங்கு வருகை தந்துள்ளேன் என இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இன்று (23) காலை ஜனாதிபதி அவர்கள் என்னை அன்புடன் வரவேற்றிருந்தார், அத்துடன் டித்வா புயலினால் ஏற்பட்ட சேதம் தொடர்பாக நாங்கள் விரிவாக கலந்துரையாடியுள்ளோம் எனவும் இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இன்று கையளிக்கப்பட்ட பிரதமர் மோடி அவர்களது கடிதம், முதற்கண் உதவி வழங்கியவர்கள் என்ற எங்களது வகிபாகத்தினை அடிப்படையாகக்கொண்ட அதேசமயம், இலங்கைக்கான 450 மில்லியன் அமெரிக்க டொலர் மீள் நிர்மாண பொதி ஒன்றினை உறுதி செய்கின்றது.
இந்நிலையில் இந்த உறுதிமொழியை எவ்வாறு துரிதமாக செயல்படுத்த முடியும் என்பது தொடர்பாகவே நமது பேச்சுகளின்போது கவனம் செலுத்தப்பட்டிருந்தது.
இலங்கை நெருக்கடியினை சந்தித்த நேரத்தில், உங்களது மிக நெருங்கிய அயலுறவாகவும், எங்களின் அயலுறவுக்கு முதலிடம் மற்றும் மகாசாகர் கொள்கைகளுக்கு அமைவாகவும், உதவிகளை வழங்குவதற்கு இந்தியா முன்வருவது மிகவும் இயல்பான ஒரு விடயமாகும்.
நீங்கள் பொருளாதார நெருக்கடியினை சந்தித்திருந்த வேளையிலும் இந்தியா இவ்வாறு முன்வந்திருந்தது.
டித்வா புயலைக் கவனத்தில் கொள்ளும்போது ஒன்றிணைந்த பேரிடர் பதிலளிப்பு நடவடிக்கைகளுக்கு இந்தியா ஒரு வலுவான ஆதரவாளராக இருக்கின்றமையை நீங்கள் பாராட்டுவீர்கள்.
இவ்விடயத்தில் நாங்கள் வழிநடத்திய ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாக பேரிடர் மீள்தன்மை உட்கட்டமைப்புக்கான கூட்டணி இருந்தது.
டித்வா புயல் கரையை அடைந்த முதல் நாளிலேயே இந்தியாவின் நிவாரண மற்றும் உதவி பணியான சாகர் பந்து நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
நமது விமானந்தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த், பிறிதொரு கப்பலான ஐஎன்எஸ் உதயகிரி ஆகிய கப்பல்கள் அத்த தருணத்தில் கொழும்பில் தரித்திருந்த நிலையில் உடனடியாகவே நிவாரண பொருட்கள் விநியோகிக்கப்பட்டதுடன், அக்கப்பல்களின் ஹெலிகொப்டர்களும் பணிகளில் ஈடுபட்டன.
அதன்பின்னர் இந்திய விமானப்படைக்கு சொந்தமான குறிப்பிட்ட எண்ணிக்கையிலான Mi17 ஹெலிகொப்டர்கள் இரண்டு வாரங்களுக்கு மேலாக இலங்கையில் இப்பணிகளில் ஈடுபட்டிருந்தன.
எண்பது பணியாளர்களுடனான தேசிய பேரிடர் மீட்பு படை சமநேரத்தில் வருகை தந்ததுடன் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதேவேளை கண்டி அருகில் இந்திய இராணுவத்தினரால் 85 மருத்துவ பணியாளர்களுடனான கள வைத்தியசாலை ஒன்று நிறுவப்பட்டு 8000க்கும் அதிகமானோருக்கு அவசர சிகிச்சை வழங்கப்பட்டிருந்தது.
இரண்டு BHISHM அவசர சிகிச்சை தொகுதிகளும் வான் மார்க்கமாக கொண்டுவரப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தன.
சேதங்களை கவனத்தில் கொள்ளும்போது, இணைப்புகளை மீளமைப்பது உடனடி முன்னுரிமைக்குரிய விடயமாகும், இதுவே அதி மேதகு ஜனாதிபதி திசாநாயக்க மற்றும் பிரதமர் மோடி இடையிலான தொலைபேசி உரையாடலில் கலந்தாலோசிக்கப்பட்ட விடயம்.
இந்நிலையில் C 17 விமானம் மூலமாக எடுத்து வரப்பட்ட ஒரு பெய்லி பாலம் இராணுவ பொறியியலாளர்களைக் கொண்ட பாரிய அணியினரால் கிளிநொச்சியில் பொருத்தப்பட்டது, இது தொடர்பாக அமைச்சர் அவர்கள் தனது உரையில் முன்னர் குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை மற்றொரு பெய்லி பாலம் தற்போது சிலாபத்தில் அமைக்கப்பட்டு வருகின்றது. சாகர் பந்து நடவடிக்கையின் கீழ், ஒட்டுமொத்தமாக 1100 டன்களுக்கும் அதிகமான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது, அதில் குறிப்பாக உலர் உணவு, கூடாரங்கள், நிலவிரிப்புகள், சுகாதாரத் தொகுதிகள், அத்தியாவசிய ஆடைகள் மற்றும் நீர் சுத்திகரிப்பு தொகுதிகள் போன்றவை உள்ளடங்குகின்றன.
அத்துடன் கிட்டத்தட்ட 14.5 டன் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டிருந்தன. நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக மேலும் 60 டன் உபகரணங்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன.
இந்நிலையில் மீளக் கட்டி எழுப்புதலின் அவசர தேவையினை உணர்ந்த பிரதமர் மோடி அவர்கள், இவ்விடயம் தொடர்பான முன்னுரிமைகளின் அடிப்படையில் நாம் தற்போது இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றவேண்டுமென அறிவுறுத்தியிருந்தார்.
அதன் அடிப்படையில் 450 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவிப் பொதி ஒன்று நம்மால் முன்மொழியப்பட்டுள்ளது.
இதில் 350 மில்லியன் அமெரிக்க டொலர் சலுகை அடிப்படையிலான கடனுதவி மற்றும் 100 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடை உதவி ஆகியவை உள்ளடங்குகின்றன.
இந்தத் உதவி பொதி குறித்து இலங்கை அரசாங்கத்துடனான ஆலோசனையில் அடிப்படையில் இறுதி செய்யப்படுகின்றது. புயலால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பின்வரும் துறைகளை உள்ளடக்கியதாக எங்களது உதவி காணப்படுகின்றது.
வீதிகள், ரயில் பாதைகள் மற்றும் பாலங்கள் ஆகிய இணைப்புகளின் புனரமைப்பு மற்றும் மீள்கட்டுமானம்.
முழுமையாக சேதமடைந்த மற்றும் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கான ஆதரவு.
புயலால் பாதிக்கப்பட்ட சுகாதார மற்றும் கல்வி முறைமைக்கான ஆதரவு.
குறுகிய மற்றும் நடுத்தர காலத்தில் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்தல் உட்பட விவசாயத்துறைக்கான ஆதரவு, மற்றும் சிறந்த பேரிடர் மீட்பு நடவடிக்கைகள் மற்றும் தயார் நிலையை நோக்கி பணியாற்றுதல்.
டித்வா புயல் இலங்கை மக்கள் மீது ஏற்படுத்திய தாக்கத்தினை தணிப்பதற்கான செயற்பாடுகள் மிக விரைவாக மேற்கொள்ளப்படவேண்டிய அவசியத்தை நாம் அறிந்திருக்கின்றோம்.
இதற்காக, மிக விரைவான அமுலாக்கத்தினை உறுதிப்படுத்தும் பயன்மிக்க ஒருங்கிணைப்பு வழிமுறை குறித்து நாம் கலந்துரையாடி வருகின்றோம்.
இந்தியாவால் ஏனைய பல வழிகளிலும் இலங்கைக்கு ஆதரவு வழங்க முடியும் என்பதை இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.
இலங்கை சுற்றுலாத்துறை சார்ந்த பொருளாதாரத்தினை முக்கிய ஆதாரமாகக் கொண்டிருக்கின்றது, ஆகவே அமைச்சர் அவர்களே, சுற்றுலாத் துறையில் இந்திய பங்களிப்பை எம்மால் தொடர்ச்சியாக ஊக்குவிக்க முடியும், என நான் உறுதியளிக்கின்றேன்.
அதேவேளை இந்தியாவால் மேற்கொள்ளப்படும் நேரடி வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும் நிலையில், கடினமான ஒரு நேரத்தில் உங்கள் பொருளாதாரத்தை அவை மேம்படுத்தும்.
இதன் காரணமாக நமது இரு நாடுகளுக்கும் இடையிலான ஓர் ஆழமான கூட்டுறவு ஒத்துழைப்பு மேம்படுத்துவதையும் நமது பேச்சுகள் கவனம் செலுத்துகின்றன.
நண்பர்களே, இலங்கையை பொறுத்தவரையில் இக்காலப்பகுதி மிகவும் கடினமான ஒரு காலப்பகுதி என்பதனை நாம் முழுமையாக ஏற்றுக் கொள்கின்றோம்.
2022 பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டுவரும் நிலையில், இந்த இயற்கை அனர்த்தம் புதிய நெருக்கடிகளை தோற்றுவித்துள்ளது.
இவ்வாறான சவால்களை முறியடித்து முன் செல்வதற்காக இலங்கை மக்கள் கொண்டிருக்கும் பலம் மற்றும் வலுவான உறுதிப்பாடு ஆகியவற்றை நாம் கடந்த காலத்தில் கண்டிருக்கின்றோம்.
முன்னொருபோதும் இல்லாதவாறு இந்தியா இலங்கையுடன் உறுதுணையாக நிற்கின்றதென நான் உங்களுக்கு உறுதியளிக்கின்றேன்.
அதே போல இந்த பெருந்துயரிலிருந்து மீட்சி அடைவதில் இலங்கை மீண்டும் ஒருமுறை தனது சிறந்த மீள்தன்மையை நிரூபிக்கும் என நான் உறுதி கூறுகின்றேன் எனவும் இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
