அரசியல்உள்நாடு

உங்கள் நம்பிக்கையை பாதுகாப்போம் – அது நாம் விரும்பி ஏற்றுள்ள பொறுப்பு – அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ்

உங்கள் விலைமதிப்பற்ற நம்பிக்கையைப் பாதுகாப்போம் என்பதோடு, அது நாம் விரும்பியே ஏற்றுள்ள பொறுப்பாகும் என, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்தார்.

வெள்ளவத்தை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இன்று (16) இடம்பெற்ற, கர்ப்பிணித் தாய்மார்களுக்கான டிசம்பர் மாதத்திற்கான விசேட ஊட்டச்சத்து கொடுப்பனவு வழங்கும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் பங்குபற்றி உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்திருந்தார்.

இயற்கை அனர்த்தங்கள் மற்றும் வரவிருக்கும் பண்டிகைக் காலத்தின் நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் குடும்பங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ள இவ்வேளையில், புதிய உயிரைச் சுமக்கும் தாய்மார்களுக்கு இந்த 5,000 ரூபா ஊட்டச்சத்து கொடுப்பனவு அர்த்தமுள்ளதாகவும், ஆறுதலாகவும் அமையும்.

இத்திட்டம் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகத்தின் வழிகாட்டலின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

வாழ்க்கையின் ஆரம்பக் கட்டத்தில் ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தைக் கருத்திற் கொண்டு, 2025 நவம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் தாய் சேய் நல சிகிச்சை நிலையங்களில் (Clinic) பதிவு செய்த கர்ப்பிணித் தாய்மார்களுக்கும், நான்கு மாதங்களுக்கும் குறைவான வயதுடைய குழந்தைகளைக் கொண்ட தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கும் இந்த நிதியுதவி ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் கொடுப்பனவாக வழங்கப்படும்.

சவால்கள் எவ்வளவு கடினமானவையாக இருந்தாலும், தாய்மார்களதும், குழந்தைகளதும் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், அவர்களின் நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக முதலீடு செய்யவும் எமது அரசாங்கம் உறுதியுடன் உள்ளது.

இந்த அங்குரார்ப்பண நிகழ்வுடன் இணைந்து, கர்ப்பிணித் தாய்மார்களுக்காகப் பல்வேறு ஆதரவு மற்றும் கல்விசார் செயற்பாடுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பிரயோக அறிவியல் பீடத்தைச் சேர்ந்த பேராசிரியர் துமிந்த குருஜே அவர்களினால், பிரசவத்திற்குத் தயாராகும் தாய்மார்களுக்கு வழிகாட்டும் விழிப்புணர்வு விரிவுரை ஒன்றும் நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்வில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளர் தரங்கனி விக்ரமசிங்க, முன்பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் நிலுஷிகா தனசேகர, வெள்ளவத்தை தாய் சேய் நல சிகிச்சை நிலைய (Clinic) பிரிவின் சுகாதார வைத்திய அதிகாரி, ஏனைய வைத்திய அதிகாரிகள், குடும்ப நல உத்தியோகத்தர்கள் மற்றும் தாய்மார்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Related posts

தமிழ், முஸ்லிம் உறவைப் பாதுகாக்கும் பொறுப்புணர்வுடன் செயற்படுகிறேன் – நிசாம் காரியப்பர் எம்.பி

editor

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் இராஜினாமா

editor

அமைச்சரவை தீர்மானங்கள் [2021-02-08]