உலகம்

உக்ரைனை கைப்பற்ற முயன்றால் ரஷ்யாவின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உக்ரைன் முழுவதையும் கைப்பற்ற முயன்றால், அது ரஷ்யாவின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கியையும் அவர் தமது ட்ரூத் சமூக ஊடகப் பக்கத்தில் நேற்று முன்தினமிரவு விமர்சித்துள்ளார்.

அந்தப் பதிவில் ட்ரம்ப், ‘ஜனாதிபதி புட்டினுடன் எனக்கு எப்போதும் நல்ல உறவு இருந்தது. ஆனால் அவருக்கு ஏதோ நடந்துள்ளது. அவர் முற்றிலும் பைத்தியமாகியுள்ளார். அவருக்கு முழு உக்ரைனும் வேண்டுமெயொழிய அதன் ஒரு பகுதி மாத்திரமல்ல என்பதை நான் எப்போதும் கூறியுள்ளேன்.

ஒருவேளை அது சரியாக இருக்கலாம். அவர் அவ்வாறு செய்தால், அது ரஷ்யாவின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் ட்ரம்ப், போர் நிறுத்தத்தை ஏற்படுத்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள சூழலில், உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்ய குண்டுத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியதையிட்டு நான் மிகவும் ஆச்சரியமடைந்துள்ளேன்’ என்று ஊடகவியலாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் உக்ரைன் ஜனாதிபதி குறித்து விமர்சித்த ட்ரம்ப், அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் படி பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதன் மூலம் தனது நாட்டிற்கு எந்த பயனும் இல்லை. அவரது வாயிலிருந்து வரும் அனைத்தும் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன, எனக்கு அது பிடிக்கவில்லை. அதை நிறுத்துவது நல்லது’ என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உக்ரைன் முழுவதும் ரஷ்யா 298 ட்ரோன்களையும் 69 ஏவுகணைகளையும் ஏவி தாக்குதல் நடத்தியதன் விளைவாக 12 பேர் கொல்லப்பட்டனர்.

இது தொடர்பில் ஸெலென்ஸ்கி மேற்கொண்ட விமர்சனத்தை தொடர்ந்தே ட்ரம்ப் தமது சமூக ஊடகத் தளத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Related posts

உக்ரைன் மீது தொடர் தாக்குதலால் ரஷியாவுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க ஜி-7 நாடுகள் ஆலோசனை

கொவிட் 19க்கு மத்தியில் தென்கொரியாவில் தேர்தல்

பங்களாதேஷின் தலைநகரான டாக்கா முடங்கியது