உலகம்

ஈரானில் தொடரும் போராட்டம் – 72 பேர் பலி – 2300 பேர் கைது – இணைய சேவை துண்டிப்பு

ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்பட பல்வேறு காரணங்களால் அந்நாட்டு உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனிக்கு எதிராக கடந்த மாதம் 28ஆம் திகதி முதல் மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஈரானில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராகத் தொடங்கிய மக்கள் போராட்டம், தற்போது அந்நாட்டின் மதச்சார்பு ஆட்சிக்கு எதிரான புரட்சியாக வெடித்துள்ளது.

சுமார் 2 வாரங்களை நெருங்கும் இப்போராட்டத்தை ஒடுக்க ஈரான் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஈரானின் தலைமை வழக்கறிஞர் முகமது மொவாஹேதி ஆசாத் விடுத்துள்ள எச்சரிக்கையில், “போராட்டத்தில் ஈடுபடுபவர்கள், அவர்களுக்கு உதவுபவர்கள் ‘கடவுளின் எதிரிகளாக’ (Enemy of God) கருதப்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

ஈரானிய சட்டப்படி இந்தக் குற்றச்சாட்டுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம். எவ்வித இரக்கமும் இன்றி போராட்டக்காரர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

அதிகரிக்கும் உயிரிழப்புகள் – முடங்கிய இணையம்

தகவல்கள் வெளியில் கசிவதைத் தடுக்க ஈரான் அரசு நாடு முழுவதும் இணையதள சேவையைத் துண்டித்துள்ளதுடன், சர்வதேச தொலைபேசி இணைப்புகளையும் துண்டித்துள்ளது.

மனித உரிமைகள் அமைப்புகளின் தகவல்படி, இதுவரை குறைந்தது 72 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 2,300-இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால், அரசுத் தொலைக்காட்சி போராட்டக்காரர்களால் கொல்லப்பட்ட பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கையை மட்டுமே முன்னிலைப்படுத்தி வருகிறது.

அமெரிக்காவின் ஆதரவும் -எச்சரிக்கையும்

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, “அமெரிக்கா ஈரானின் துணிச்சலான மக்களுக்குத் துணை நிற்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “ஜனாதிபதி ட்ரம்ப் ஒரு விஷயத்தைச் செய்வேன் என்று சொன்னால், அதை நிச்சயம் செய்வார். அவரிடம் விளையாட வேண்டாம்” என்று அமெரிக்க வெளியுறவுத்துறை ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

போராட்டத்தின் பின்னணி என்ன?

கடந்த டிசம்பர் 28ஆம் திகதி ஈரானிய நாணயமான ‘ரியால்’ (Rial) மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்தது (ஒரு டாலருக்கு 1.4 மில்லியன் ரியால்).

இதனால் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியே போராட்டத்திற்கு வித்திட்டது. ஆரம்பத்தில் பொருளாதாரத்திற்காகத் தொடங்கிய இந்தப் போராட்டம், இப்போது ஈரானின் ஆட்சிமுறைக்கு எதிரான நேரடிச் சவாலாக மாறியுள்ளது. தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் “காமெனிக்கு மரணம்!” என்ற முழக்கங்கள் எதிரொலித்து வருகின்றன.

விமானப் போக்குவரத்து இரத்து

ஈரானில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக, ஆஸ்திரிய ஏர்லைன்ஸ் மற்றும் டர்க்கிஷ் ஏர்லைன்ஸ் போன்ற சர்வதேச நிறுவனங்கள் ஈரானுக்கான தங்களது விமானச் சேவைகளைத் தற்காலிகமாகஈரத்து செய்துள்ளன.

கடுமையான ஒடுக்குமுறைகளுக்கு மத்தியிலும், ஈரானின் முன்னாள் பட்டத்து இளவரசர் ரேசா பஹ்லவி உள்ளிட்டோர் மக்களைத் தொடர்ந்து வீதிக்கு வந்து போராடுமாறு அழைப்பு விடுத்து வருகின்றனர்.

Related posts

டிசம்பர் வரையிலும் ஊரடங்கு அமுல் தொடரும்

இஸ்ரேலை யாரும் கட்டுப்படுத்த முடியாது – இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

editor

நைஜீரிய துப்பாக்கிச்சூடு – 14 பேர் பலி