ஈரான் அரசுக்கு எதிராக மக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், இணைய சேவைகளும், தொலைப்பேசி இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.
ஈரானில் நிலவும் பணவீக்கம், நாணய மதிப்பு வீழ்ச்சி, விலைவாசி உயா்வு போன்றவற்றுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் எனவும், கமேனி தலையிலான ஆட்சி அகற்றப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தலைநகா் டெஹ்ரான், இஸ்ஃபஹான், ஷிராஸ், மஷ்ஹத் உள்ளிட்ட 31 மாகாணங்களிலும் போராட்டங்கள் பரவியுள்ளன.
இந்த போராட்டத்தின் போது பேருந்து, கார்கள், கடைகள் உள்ளிட்டவைக்கு தீ வைக்கப்பட்டது. வன்முறையில் இதுவரை 42 பேர் பலியாகியுள்ளனர்.
போராட்டத்துக்கு ஆதரவாக கடைகளும், சந்தைகளும் மூடப்பட்டுள்ள நிலையில், 2,270 பேரைக் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதனிடையே, ஈரான் அரசுக்கு எதிராக வீதிகளில் இறங்கி மக்கள் போராட்டம் நடத்த வேண்டும் என்று நாடுகடத்தப்பட்ட பட்டத்து இளவரசர் ரெசா பஹ்லவி அழைப்பு விடுத்ததை அடுத்து, போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
நாடு முழுவதும் இணைய சேவைகளை துண்டித்துள்ள ஈரான் அரசு, சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கு தடை விதித்துள்ளது.
இதனிடையே, ஈரானின் மதகுரு கமேனி அந்நாட்டைவிட்டு தப்பித்துச் செல்ல திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த வன்முறைகளுக்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆதரவுபெற்ற பயங்கரவாதிகளே காரணம் என்று ஈரான் அரசு குற்றம்சாட்டியுள்ளது.
