உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் – காசாவில் போர் நிறுத்தம் – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் “இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இரு தரப்பும் அமைதி திட்டத்தின் முதல் கட்டத்துக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளனர்” என்று அறிவித்தார்

“இதன் பொருள் பணயக்கைதிகள் அனைவரும் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள், மேலும் இஸ்ரேல் தங்கள் துருப்புக்களை ஒப்புக்கொண்ட எல்லை வரை திரும்பப் பெறும்” என்று ட்ரூத் சோஷியல் எனும் சமூக ஊடகத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

வரவிருக்கும் நாட்களில் மத்திய கிழக்கிற்கு பயணம் செய்வது குறித்து டிரம்ப் பரிசீலித்து வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த ஒப்பந்தத்தை “இஸ்ரேலுக்கு ஒரு சிறந்த நாள்” என்று கூறுகிறார்.

ஒப்பந்தத்தை அங்கீகரிக்கவும், “எங்கள் அன்பான பணயக்கைதிகள் அனைவரையும் வீட்டிற்கு அழைத்து வரவும்” நாளை இஸ்ரேல் அரசாங்கத்தை கூட்டுவேன் என்று நெதயன்யாகு தெரிவித்துள்ளார்.

“எங்கள் பணயக்கைதிகளை விடுவிக்கும் இந்த புனித பணிக்கு அணிதிரண்டதற்காக” இஸ்ரேலிய துருப்புக்கள் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அவரது குழுவினருக்கு அவர் நன்றி தெரிவிக்கிறார்.

ஹமாஸ் இந்த ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தியுள்ளது மற்றும் இந்த ஒப்பந்தத்தை முழுமையாக பின்பற்ற இஸ்ரேலை கட்டாயப்படுத்துமாறு டிரம்ப் மற்றும் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

7 ஒக்டோபர் 2023 ஹமாஸ் இஸ்ரேலில் நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்ட நிலையில், 251 பேர் பிணைக் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் இஸ்ரேல் காஸாவில் ஒரு இராணுவ நடவடிக்கையைத் தொடங்கி இரண்டு ஆண்டுகள், இரண்டு நாட்களான நிலையில் இந்த ஒப்பந்தம் முடிவாகியுள்ளது.

காஸாவில் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளில் 20,179 குழந்தைகள் உட்பட குறைந்தது 67,183 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவிக்கிறது.

பிபிசியின் அமெரிக்க செய்தி கூட்டாளியான சிபிஎஸ்-ன் படி, ஹமாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஒப்பந்தம் “காஸா மீதான போரை முடிவுக்குக் கொண்டுவரும், ஆக்கிரமிப்புப் படைகள் முழுமையாக திரும்பப் பெறுவதை உறுதி செய்யும், மனிதாபிமான உதவிகளை அனுமதிக்கும், கைதிகள் பரிமாற்றத்தை செயல்படுத்தும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தார், எகிப்து, துருக்கி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோரின் மத்தியஸ்த முயற்சிகளுக்கு ஹமாஸ் நன்றி தெரிவித்துள்ளது. “இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கம் ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு முழுமையாக இணங்குவதை உறுதி செய்ய” டிரம்ப் மற்றும் பிற கட்சிகளுக்கு ஹமாஸ் அழைப்பு விடுக்கிறது.

காஸா மக்கள் “ஒப்பிடமுடியாத தைரியம், மரியாதை மற்றும் வீரத்தை வெளிப்படுத்தியுள்ளனர்” என்று ஹமாஸ் மேலும் கூறுகிறது.

“சுதந்திரம், மற்றும் சுயநிர்ணயம் அடையப்படும் வரை நாங்கள் எங்கள் மக்களின் தேசிய உரிமைகளை ஒருபோதும் கைவிடமாட்டோம்.” என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்த உடன்பாடு நீடித்தால், ட்ரம்ப் இதை அவரது இரண்டாவது பதவிக்காலத்தின் மகுடம் சூட்டும் வெளியுறவுக் கொள்கை சாதனையாக சுட்டிக்காட்டுவார் என்று வெள்ளை மாளிகையில் இருந்து பிபிசி நிருபர் பெர்ன் டெபுஸ்மேன் ஜூனியர் கூறுகிறார்.

காஸாவில் உள்ள பாலத்தீனியர்கள் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்தின் செய்தியைக் கொண்டாடும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

பாலத்தீன பத்திரிகையாளர் சயீத் முகமது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட இரவுநேர காட்சிகளில், டெய்ர் அல்-பாலா எனும் நகரில் உள்ள அல்-அக்சா வைத்தியசாலைக்கு வெளியே ஆண்களும் பெண்களும் இசைக்கு நடனமாடுவதை காண முடிந்தது. அவர்கள் விசில் அடித்து, கைதட்டி “அல்லாஹு அக்பர்” (“கடவுளே பெரியவர்”) என்று கோஷமிட்டனர்.

பத்திரிகையாளர் முகமது அல்-ஹடாட்டின் மற்றொரு வீடியோவில் காஸாவின் வேறு ஒரு பகுதியில் இளைஞர்கள் கூடி நடனமாடுவதை காண முடிந்தது.

பத்திரிகையாளர் முகமது அல்-ஹடாட்டின் மற்றொரு வீடியோவில் காஸாவின் வேறு ஒரு பகுதியில் இளைஞர்கள் கூடி நடனமாடுவதை காண முடிந்தது.

ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், இந்த ஒப்பந்தத்தை முழுமையாக செயல்படுத்துவதற்கும், காஸாவில் மனிதாபிமான உதவிகள் வழங்குவதை அதிகரிப்பதற்கும், ஐ.நா ஆதரவளிக்கும் என்று கூறியுள்ளார்.

இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவித்தல், நிரந்தர போர் நிறுத்தத்திற்கு கட்டுப்படுதல், உடனடியாக காஸாவிற்குள் மனிதாபிமான பொருட்களை அனுமதித்தல் உள்ளிட்ட உடன்பாட்டின் நிபந்தனைகளுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்றும் குட்டரெஸ் அனைத்து தரப்பினரையும் வலியுறுத்தினார்.

“துன்பம் முடிவுக்கு வர வேண்டும்,” என்று குட்டரெஸ் கூறினார்.

“பாலத்தீன மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து, இஸ்ரேலியர்கள் மற்றும் பாலத்தீனியர்கள் அமைதியுடனும் பாதுகாப்புடனும் வாழ உதவும் வகையில் இந்த முக்கியமான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அனைத்து தரப்பினரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.” என்றும் வலியுறுத்தினார்.

Related posts

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

editor

கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை

editor

கொவிட் – 19 : பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியது