உள்நாடு

இழப்பீட்டு அலுவலகத்தின் முன்னாள் பதில் பணிப்பாளர் நாயகத்திற்கு பிணை

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட இழப்பீட்டு அலுவலகத்தின் முன்னாள் பதில் பணிப்பாளர் நாயகமும், நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் தற்போதைய மேலதிக செயலாளருமான செபாலிகா சமன் குமாரியை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (08) உத்தரவிட்டது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைய அதிகாரிகள் மற்றும் சந்தேக நபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்தார்.

அதன்படி, சந்தேக நபரை தலா 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதித்த நீதவான், சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுப்பதை தவிர்க்குமாறும் உத்தரவிட்டார்.

சந்தேக நபரை இழப்பீட்டு அலுவலகத்தின் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்றும் உத்தரவிட்ட நீதவான், சந்தேக நபரை இழப்பீட்டு அலுவலகத்தின் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த வேண்டாம் என்றும் அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டார்.

சந்தேகநபர் நீண்ட காலமாக பொது சேவையில் இருந்து வருவதையும், இந்த சம்பவத்தால் அவருக்கு எந்த நிதி நன்மையும் கிடைக்கவில்லை என்பதையும் சிறப்பு சூழ்நிலையாகக் கருத்தில் கொண்டு பிணை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் நீதவான் கூறினார்.

பின்னர் முறைப்பாட்டை இந்த மாதம் 14 ஆம் திகதி அழைக்குமாறு உத்தரவிட்டார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவுக்குச் சொந்தமான மகாவலி காணியில் கட்டப்பட்ட கட்டிடம் போராட்டக்காரர்களால் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இழப்பீடாக 88 லட்சம் (8,850,000) ரூபாய் வழங்க சதி செய்தமை மற்றும் உதவியதற்காகவும் சந்தேகநபர் இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டார்.

Related posts

போலி அடையாள அட்டை தயாரித்த இருவர் கைது

ஃபைஸர் தடுப்பூசியின் முதற் தொகுதி நாட்டிற்கு

ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு தொடர்பாக – கல்வி அமைச்சின் மகிழ்ச்சி தகவல்