அரசியல்உள்நாடுவணிகம்

இலத்ததிரனியல் வணிகத் தளங்களுக்கான வரிவிதிப்புத் தொடர்பான விடயங்கள் தீர்க்கப்பட்டன

வெளிப்புற முதலீடுகள் குறித்த புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்கள், உள்ளூர் நிறுவனங்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்கான அதிகரித்த வரம்புகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் எல்லை தாண்டிய விரிவாக்கத்தை எளிதாக்குவதற்கான செயல்முறைகளை நெறிப்படுத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய கட்டளை குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.

2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் 22ஆம் பிரிவின் கீழ் 2025.06.18ஆம் திகதியிடப்பட்ட 2441/14 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் குறித்த கட்டளை வெளியிடப்பட்டுள்ளது.

அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையில் அண்மையில் 2025.07.29ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் ஆராயப்பட்டது.

இதற்கமைய பட்டியலிடப்பட்ட கம்பனிகளின் முதலீட்டுக்கான எல்லை 500,000 அமெரிக்க டொலரிலிருந்து 750,000 அமெரிக்க டொலர் வரையில் அதிகரிக்கப்பட்டிருப்பதுடன், பட்டியலிடப்படாத கம்பனிகளுக்கான முதுலீட்டுக்கான எல்லை 150,000 அமெரிக்க டொலரில் இருந்து 200,000 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த எல்லைக்கு அப்பால் முதலீடு செய்ய விரும்பும் நிறுவனங்கள் இப்போது வெளிநாட்டு மூலங்களிலிருந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையான கடன் வாங்க முடியும் என்பதுடன், மத்திய வங்கி மேற்பார்வையுடன், 2 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேலான முதலீட்டைச் செய்வதற்கு விசேட அனுமதி தேவைப்படும்.

வெளிப்புற முதலீடுகளுக்கான நிதி இலங்கையிலிருந்து மாற்றப்பட முன்னர் அவை வெளிமுக வெளிநாட்டுக் கணக்குகள் ஊடாகக் கொடுப்பனவுகள் செய்யப்பட வேண்டும். இலங்கை மத்திய வங்கி உரிமம் பெற்ற வங்கிகளுக்கு இந்தப் பரிவர்த்தனைகளை விரைவாக எளிதாக்குவதற்கான பொதுவான அனுமதியை வழங்கியுள்ளது, இதனால் நிறுவனங்கள் தேவையற்ற தாமதங்கள் இல்லாமல் வாய்ப்புகளை அணுக முடியும்.

இந்தத் திருத்தங்கள் இலங்கை வணிகங்களை, குறிப்பாக தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் துறைகளில், மூலதனப் போக்குகளைக் கண்காணித்து உலகளாவிய விரிவாக்கத்தைத் தொடர ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன என இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

முன்னைய கட்டுப்பாடுகள் சில நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயரத் தூண்டுகின்றன என்ற பின்னணியிலேயே இந்தத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்த இலங்கை மத்திய வங்கியின் பிரதிநிதிகள், குறுகியகால விநியோகக் கடன்கள் மேலதிக கட்டுப்பாடுகள் இல்லாமல், நடைமுறைக்கணக்குப் பரிவர்த்தனையாக வகைப்படுத்தப்படும் என்று உறுதியளித்தனர்.

அத்துடன், 2024ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க பொதுத் தனிசு முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் 2025.06.30ஆம் திகதியிடப்பட்ட 2443/14ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்கு விதிகள் குழுவில் நீண்டநேரம் விவாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டன.

வாகன இறக்குமதி தொடர்பான சர்வதேச கடன் உறுதிப்பத்திரம் (Cross-border LC) மற்றும் பதிவு நீக்கத் தேவைகளையும் குழு ஆய்வு செய்தது. மேலும் சீட்டாட்ட தொழில் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவை மற்றும் இலத்திரனியல் வணிகத் தளங்களுக்கான வரிவிதிப்புத் தொடர்புடைய விடயங்களில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் குழு கேட்டறிந்தது.

2024ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க பொதுத் தனிசு முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் 35ஆம் பிரிவின் கீழான ஒழுங்குவிதியை மறுபரிசீலனை செய்வதன் மூலம், அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் புதிய கட்டமைப்பின் கீழ் சர்வதேச கடன் வாங்குவதற்கான தடையற்ற அணுகலை இனி கொண்டிருக்காது.

திறைசேரியிலிருந்து இறையாண்மை உத்தரவாதங்களுக்குத் தகுதி பெற சர்வதேச நாணய நிதியம் அறிமுகப்படுத்தியுள்ள அடைவுமட்டங்களை அவை பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

இந்த வழிமுறை கடன் வழங்குபவர் வட்டி விகிதங்களுக்கு கூடுதலாக கடன் இடர் மீதான அடிப்படைகளைத் தீர்மானிப்பதுடன், அரச சார்பு நிறுவங்களின் நிதி ஒழுக்கத்தை ஊக்குவிக்கும் அதே வேளையில் கடன் வாங்குவதை அதிக விலை கொண்டதாக ஆக்குகின்றது.

அதிகாரிகள் மேலும் தெரிவித்ததாவது, பொதுத் தனிசு முகாமைத்துவச் சட்டத்தின்படி, இலங்கை தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 7.5% அளவில் கடன் பெறும் வரம்புக்குள் செயல்பட்டு வருகிறது.

இதில் ஏற்கனவே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 5% பயன்படுத்தப்பட்டுவிட்டதால், எதிர்கால வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி நிதியளித்தலுக்காக மீதமுள்ள கடன் பெறும் திறன் 2.5% மட்டுமே உள்ளது.

மேலும், குழு உறுப்பினர்கள் BYD வாகன விவகாரம் தொடர்பாகவும் கேள்விகள் எழுப்பினர். இவ்விவகாரத்தில், 1,000-க்கும் மேற்பட்ட கார்கள் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், இந்த நிலையில் நாட்டின் முக்கியமான நிறுவனங்களில் ஒன்றுக்கு எதிராக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து குழுவின் தலைவர் அதிகாரிகளிடம் வினவினார்.

சுங்க வரிகள் இயந்திரக் கொள்ளளவின் அடிப்படையில் கணக்கிடப்படுகின்ற நிலையில் வாகனங்களின் இயந்திரக் கொள்ளளவைக் குறைத்துக் காண்பித்து வரிவிலக்கு பெற முயற்சித்திருக்கும் சந்தேகத்திற்கு உட்பட்டு தற்போது விசாரணை நடந்து வருகிறது என்று சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏனெனில், விசாரணைகள் தொடரும் அதேவேளையில், சாத்தியமான இராஜதந்திர தாக்கங்கள் குறித்துக் குழுவின் தலைவர் கவலை தெரிவித்தார், சர்வதேச அளவுகோல்களை பூர்த்தி செய்யாத உள்ளூர் விசாரணைகளை விட சர்வதேச தரங்களைப் பயன்படுத்துமாறு அதிகாரிகளை வலியுறுத்தினார்.

சீட்டாட்ட தொழில் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலத்தில் முன்மொழியப்பட்ட மேம்பாடுகள் குறித்தும் குழு ஆராய்ந்தது.

தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை ஆகியவற்றை ஒழுங்குமுறைப்படுத்தும் கட்டமைப்புக்குள் கொண்டுவர வேண்டும் என்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இலத்திரனியல் வர்த்தகத் தளங்கள் மீதான வரிவிதிப்புக் குறித்த விவகாரம் தீர்க்கப்பட்டிருப்பதாக குழுவில் ஆஜராகியிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

எச்.எஸ் குறியீட்டின் அடிப்படையில் வரி அறவீட்டுக்குப் பதிலாகப் பழைய முறையின் அடிப்படையில் வரி அறவீட்டுக்குச் சென்றமையால் முன்னர் காணப்பட்ட காலதாமதங்கள் நிவர்த்தி செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இந்தக் கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, சட்டத்தரணி ரவூப் ஹக்கீம், (கலாநிதி) கௌசல்யா ஆரியரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related posts

பதில் பொலிஸ்மா அதிபருக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தல்

ஐக்கிய தேசியக் கட்சியுடன் மீண்டும் இணையுங்கள் – சஜித்துக்கு ஆஷு மாரசிங்க பகிரங்க அழைப்பு

editor

பொரளை பகுதியில் கோர விபத்து – ஒருவர் பலி

editor