அபிவிருத்திக்கான சவூதி நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுல்தான் அல் மர்ஷாட், இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை நாளை (13) ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளவுள்ளார்.
சவூதி அரேபியாவின் 28 மில்லியன் அமெரிக்க டொலர் மானியத் தொகையில் நிர்மாணிக்கப்பட்ட வயம்ப பல்கலைக்கழகத்தின் நகர அபிவிருத்தி திட்டத்தின் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காகவே இவர் இலங்கை வருகிறார்.
கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சரான பிரதமர் ஹரினி அமரசூரியவின் பங்கேற்புடனான இந்த நிகழ்வு 14ஆம் திகதி திங்கட்கிழமை வயம்ப பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வில் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் கமூத் அல் கஹ்தானி மற்றும் ஆளும் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களும் பங்கேற்கவுள்ளனர்.
இந்த திட்டத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ஆம் திகதி வயம்ப பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்விலும் அபிவிருத்திக்கான சவூதி நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டத்தின் ஊடாக வயம்ப பல்கலைக்கழகத்தின் குளியாப்பிட்டிய மற்றும் மாகுந்தர ஆகிய வளாகங்களில் மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளன.
-எஸ். சினீஸ் கான்