நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தில் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு மின் பிறப்பாக்கிகள், ஜனவரி 14 மற்றும் ஜனவரி 18 ஆம் திகதிகளில் தேசிய மின் கட்டமைப்பில் மீண்டும் இணைக்கப்படவுள்ளன.
இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையின்படி, 2 ‘B’ இலக்க மின் பிறப்பாக்கியை எதிர்வரும் 2026 ஜனவரி 14 ஆம் திகதி தேசிய மின் கட்டமைப்பில் இணைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போது அந்தப் பிறப்பாக்கியின் பராமரிப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
உரிய தரப் பரிசோதனைகளுக்குப் பின்னர் அது தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்படும் என மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, 1 ஆம் இலக்க மின் பிறப்பாக்கியின் கொதிகலனில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, அந்தப் பிறப்பாக்கி கடந்த 2025 டிசம்பர் 20 ஆம் திகதி பாதுகாப்பு கருதி நிறுத்தப்பட்டது.
தற்போது அதன் கோளாறுகளைச் சரிசெய்யும் பணிகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அதனை 2026 ஜனவரி 18 ஆம் திகதியளவில் மீண்டும் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்க எதிர்பார்ப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இந்தச் சூழல் நாட்டின் தொடர்ச்சியான மின்சார விநியோகத்திற்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் இலங்கை மின்சார சபை உறுதியளித்துள்ளது.
