அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

இலங்கை பாராளுமன்றத் தூதுக் குழு ஐக்கிய இராச்சியத்திற்கு விஜயம்

பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இலங்கை பாராளுமன்றத்தின் உயர்மட்டக் குழுவினர் 2025 ஒக்டோபர் 26 முதல் 29 வரை நான்கு நாட்கள் ஐக்கிய இராச்சியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டனர்.

இந்த விஜயமானது இரு பாராளுமன்றங்களுக்கும் இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், ஜனநாயக ஆட்சியமைப்பை முன்னேற்றுதல், நிறுவன வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டமைந்தது.

இந்தக் குழுவில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக கௌரவ அமைச்சரும் ஆளும் கட்சியின் முதற்கோலாசானுமாகிய (வைத்தியர்) நளிந்த ஜயதிஸ்ஸ, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு கௌரவ அமைச்சரும் இலங்கை – ஐக்கிய இராஜ்ஜிய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவருமான (சட்டத்தரணி) ஹர்ஷன நாணயக்கார மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சரும், பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவருமான சரோஜா சவித்ரி போல்ராஜ் மற்றும் பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன ஆகியோர் அடங்கியிருந்தனர்.

இந்த விஜயத்தை ஜனநாயகத்துக்கான வெஸ்ட்மின்ஸ்டர் மன்றம் (WFD) ஒழுங்கு செய்ததுடன், ஐக்கிய இராச்சியத்தின் சர்வதேச அபிவிருத்தி நிறுவனம் இதற்கு நிதியளித்திருந்தது. இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கௌரவ அன்ரூ பற்றிக் அவர்களும் இந்தக் குழுவுடன் இணைந்துகொண்டார்.

இந்த விஜயத்தில் வினைத்திறனான சட்டம், மேற்பார்வை மற்றும் நல்லாட்சி ஆகியவற்றை ஊக்குவிக்கும் நிறுவனக் கட்டமைப்புகள் மற்றும் நடைமுறைகள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.

சட்டம் இயற்றப்பட்டதன் பின்னரான பரிசீலனை (Post-Legislative Scrutiny – PLS) அதாவது சட்டமியற்றுபவர்கள் சட்டங்கள் இயற்றிய பின்னர் அவற்றின் அமுலாக்கம் மற்றும் தாக்கத்தை முறையாக மீளாய்வு செய்வதன் மூலம் அவற்றின் நோக்கம் அடையப்பெற்றுள்ளதா என்பதையும் பிரஜைகளின் நலன்களுக்கு ஏற்றதாக உள்ளதா என்பதையும் உறுதி செய்யும் செயல்முறை பற்றி பிரதானமாக கலந்துரையாடப்பட்டது.

இத்தகைய வழிமுறைகள் எவ்வாறு பொறுப்புக்கூறல் மற்றும் ஊழலுக்கு எதிரான முயற்சிகளை மேம்படுத்துகின்றன என்பன பற்றி ஆராயும் வகையில் இலங்கை தூதுக்குழுவினர் இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள், குழு அதிகாரிகள் மற்றும் மேற்பார்வை அமைப்புகளுடன் விரிவாகக் கலந்துரையாடினர்.

இந்த விஜயத்தின் போது, தூதுக்குழுவினர் பொதுச் சபையின் சபாநாயகர் ஓய்வுபெற்ற கௌரவ சர் லிண்ட்ஸே ஹோய்ல், வெளிநாட்டு, பொதுநலவாயம் மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தில் (FCDO) இந்து-பசுபிக் பிராந்தியத்திற்கான அமைச்சர் சீமா மல்ஹோட்ரா மற்றும் பொதுச் சபையின் நடைமுறைக் குழுவின் தலைவர் கேட் ஸ்மித் ஆகியோருடன் உயர்மட்டச் சந்திப்புகளை நடத்தினர்.

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சரும், பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவருமான சரோஜா சவித்ரி போல்ராஜ், பாராளுமன்ற நடவடிக்கை மூலம் பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தலை மேம்படுத்துவது குறித்த ஒரு விசேட கலந்துரையாடலுக்காக இங்கிலாந்து பிரதமரின் பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளுக்கான விசேட தூதுவர், கௌரவ பரோனஸ் ஹேரியட் ஹார்மன் அவர்களையும் சந்தித்தார்.

இலங்கை பாராளுமன்றத்தின் சட்ட மீளாய்வு செயல்முறைகளை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆராயும் வகையில் லண்டன் பல்கலைக்கழகத்தின் மேம்பட்ட சட்ட ஆய்வுகள் நிறுவனத்தின் (Institute of Advanced Legal Studies) கல்விசார் நிபுணர்களையும் தூதுக்குழுவினர் சந்தித்தனர்.

WFD இன் பிரதம நிறைவேற்று அதிகாரி அந்தோனி ஸ்மித் மற்றும் WFD குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் யாஸ்மின் குரேஷி உட்பட ஜனநாயகத்திற்கான வெஸ்ட்மின்ஸ்டர் மன்றத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் குழு உறுப்பினர்களுடனும், இரண்டு நிறுவனங்களுக்கிடையேயான தற்போதைய ஒத்துழைப்புக்களை வலுப்படுத்துவது குறித்தும் இதன்போது மேலும் ஆலோசனைகள் நடத்தப்பட்டன.

இந்த விஜயம் இரு பாராளுமன்றங்களும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், ஜனநாயக நிர்வாகம், நிறுவன ஒருமைப்பாடு மற்றும் சட்டத்தின் ஆட்சியை மேம்படுத்துவதற்கான அவர்களின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தவும் ஒரு பெறுமதிவாய்ந்த வாய்ப்பை வழங்கியது.

அத்துடன், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லாட்சியை முன்னேற்றுவதில் பாராளுமன்றங்களின் பிரதான பங்கைப் பரஸ்பரம் அங்கீகரிப்பதன் அடிப்படையில் அமைந்த இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான வலுவான மற்றும் நீடித்த நட்புறவை இது மேலும் சுட்டிக்காட்டுவதாக அமைந்தது.

Related posts

மனோ கணேசன் கட்சியில் யார் போட்டியிடுகிறார்கள் முழு விவரம்

editor

தெற்கு அதிவேக வீதியில் பேருந்து ஒன்றில் தீ பரவல்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை