அரசியல்உள்நாடு

இலங்கை பாராளுமன்றத்தில் நவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது

இலங்கையின் பல் மத சகவாழ்வை அடையாளப்படுத்தும் வகையில் நவராத்திரி விழா கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் இன்று (09) பாராளுமன்றத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களும் இணைந்துகொண்டார்.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் கௌரவ அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் அனுசரணையுடன், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் இலங்கைப் பாராளுமன்றத்துடன் இணைந்து இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தன.

இந்து பக்தர்களால் மிகவும் பக்தியுடன் கொண்டாடப்படும் நிகழ்வாக இந்த நவராத்திரி விழா காணப்படுகின்றது.

இது ஒவ்வொரு ஆண்டும் பொதுவாக ஒக்டோபர் மாத ஆரம்பத்தில் கொண்டாடப்படுவதுடன், முப்பெரும் சக்திகளை நினைத்து ஒன்பது இரவுகள் வழிபடும் நிகழ்வாகும். இதில் முதல் மூன்று நாட்களும் துர்க்கா தேவியை வேண்டி வழிபாடுகள் நிகழ்த்தப்படும்.

அடுத்த மூன்று நாட்கள் அழியாத செல்வத்தையும் புகழையும் தரும் லக்ஷமி தேவியை வேண்டியும், இறுதி மூன்று நாட்கள் கல்விச் செல்வத்தை வேண்டி சரஸ்வதி தேவியை நினைத்தும் வழிபாடுகள் நிகழத்தப்படும். பத்தாவது நாளில் வித்யாரம்பம் இடம்பெறும்.

இந்து மதக் குருமார் பூஜை நிகழ்வுகளுடன் இந்த நிகழ்வு பக்திபூர்வமான முறையில் பாராளுமன்ற வளாகத்தில் ஆரம்பமானது. இங்கு மங்கல வாத்திய இசை நிகழ்வு மற்றும் நடன நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இங்கு உரையாற்றிய கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய, இந்தப் பூஜை விழாவை நடத்துவதன் மூலம் முழு நாட்டிற்கும் ஆசீர்வாதம் கிடைப்பதுடன், ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட பணிகளை சிறப்பாகச் செயற்படுத்தத் தேவையான பலமும், சக்தியும் கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் இங்கு உரையாற்றுகையில், மக்களை அவர்களின் தீய எண்ணங்களிலிருந்து விடுவிப்பதற்குத் தேவையான பலம் இந்த உயர்ந்த தெய்வங்களை வழிபடுவதன் மூலம் பெறப்படுகிறது என்று கூறினார்.

இந்த தெய்வங்களின் நற்பண்புகளையும் மக்கள் உள்வாங்க வேண்டும் என்றும், தெய்வங்களின் ஆசீர்வாதங்களால் சிறந்த மனிதர்கள் உருவாக்கப்படுகிறார்கள் என்றும் வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வில் இந்து மதகுருமார், குழுக்களின் பிரதித் தவிசாளர் கௌரவ ஹேமாலி வீரசேகர, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் (கலாநிதி) ஹினிதும சுனில் செனவி, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் கௌரவ அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் கௌரவ கஜயந்த கருணாதிலக, கௌரவ அமைச்சர்கள், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், பதில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன மற்றும் பாராளுமன்ற பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Related posts

அரசாங்கம் மக்களின் காணிகளைக் கூட கொள்ளையடிக்கும் நிலைக்கு வந்துள்ளது – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

காற்றழுத்த தாழ்வுநிலை படிப்படியாக குறையும் – இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

editor

கொவிட் தொற்றின் போது தகனம் செய்யப்பட்ட முஸ்லிம்களின் உடல்கள் – மன்னிப்புக் கோரும் அமைச்சரவை.