பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – பாகிஸ்தான் பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவு செய்யப்பட்டார்.
இச்சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கடந்த 05 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்றபோது இந்தத் தெரிவு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாகிஸ்தானின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பாஹீமுல் அஸீஸ் விருந்தினராகக் கலந்துகொண்டார்.
கூட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர் ரியாஸ் பாரூக் சங்கத்தின் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, இலங்கை – பாகிஸ்தான் இடையிலான நீண்டகால நட்புறவை சுட்டிக்காட்டி, வர்த்தகம், கல்வி, பாதுகாப்பு மற்றும் மக்கள் தொடர்புகளில் ஒத்துழைப்பை வலியுறுத்தினார்.
பாகிஸ்தானின் தொடர்ச்சியான ஆதரவுக்கு நன்றி தெரிவித்த அவர், இச்சங்கத்தின் மீள் ஸ்தாபிப்பு இரு நாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்தும் எனக் குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் பாஹீமுல் அஸீஸ், புதிய செயற்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து, மத மற்றும் கலாசார சுற்றுலாவை விரிவாக்குவதற்கான சாத்தியங்களை எடுத்துரைத்தார்.
மேலும், சங்க உறுப்பினர்களை பாகிஸ்தானுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
தலைவராக தெரிவு செய்யப்பட்ட அனுர கருணாதிலக்க, இச்சங்கம் இரு நாடுகளுக்கு இடையிலான உரையாடல், ஒத்துழைப்பு மற்றும் நம்பிக்கையை வளர்க்கும் தளமாக இருக்கும் எனவும், உறுப்பினர்கள் அனைவரும் செயல்பாடுகளுக்கு பங்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
செயலாளர் ரியாஸ் பாரூக், சபாநாயகர், உயர்ஸ்தானிகர் மற்றும் உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்து, சங்கத்தின் நோக்கங்களை அடைய உறுதியுடன் பணியாற்றுவதாகக் கூறினார்.
கூட்டத்திற்கு முன், உயர்ஸ்தானிகர் சபாநாயகரைச் சந்தித்து, முதலீடு, வர்த்தகம், சுற்றுலா மற்றும் கல்வி துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடினார்.