அரசியல்உள்நாடு

இலங்கை – தாய்லாந்து பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – தாய்லாந்து பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் கௌரவ அமைச்சர் (கலாநிதி) ஹினிதும சுனில் செனவி தெரிவுசெய்யப்பட்டார்.

இலங்கை – தாய்லாந்து பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை மீளஸ்தாபிக்கும் கூட்டம் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் நேற்று (21) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் பைதூன் மஹாபன்னபோர்ன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டதுடன், கௌரவ அமைச்சர்கள், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டிஆரச்சி இந்த நட்புறவுச் சங்கத்தின் செயலாளராகவும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) இளையதம்பி ஸ்ரீநாத் பொருளாளராகவும் தெரிவுசெய்யப்பட்டனர்.

1955 ஆம் ஆண்டு இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையில் முறையான இராஜதந்திர உறவுகள் ஆரம்பித்தது முதலான நீண்டகால இருதரப்பு உறவை இரு தரப்பினரும் எடுத்துரைத்தனர்.

பௌத்த பாரம்பரியத்தால் வளர்க்கப்பட்ட நாடுகள் என்ற வகையில், வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, கல்வி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் கலாச்சார பரிமாற்றங்கள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான இரு நாடுகளின் அர்ப்பணிப்பு இங்கு மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை மீளஸ்தாபிப்பது இரு நாடுகளும் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், பரஸ்பர உறவுகளை மேலும் மேம்படுத்தவும் உதவும் என்று இரு தரப்பினரும் சுட்டிக்காட்டினர்.

இந்த சந்திப்பிற்கு முன்னதாக, தாய்லாந்து தூதுவருக்கும் கௌரவ சபாநாயகருக்கும் இடையில் ஒரு சுமுகமான சந்திப்பும் நடைபெற்றது.

இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவதற்கான தற்போதைய வாய்ப்புகளை மேம்படுத்துவது குறித்து இந்தச் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.

Related posts

சிறைக்கைதியின் வழிநடத்தலில் போதைப்பொருள் கடத்திய நபர் கைது

கடற்றொழில் அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!

20முஸ்லிம் பெண்களை அழைத்த நிதியமைச்சர் : முஸ்லிம் எம்பிக்களை எச்சரிக்கும் முபாற‌க் அப்துல் ம‌ஜீத்