இலங்கை தபால் திணைக்களத்திற்குப் பொதுத் திறைசேரியினால் வழங்கப்பட்ட கடந்த வருடத்திற்கான வருமான இலக்கை கடந்து அந்த திணைக்களம் மேலதிக வருமானத்தையும் பெற்றுள்ளது.
இதற்கமைய, கடந்த வருடத்தில் 13,100 மில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்ட முடிந்ததாகத் தபால் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார்.
கடந்த வருடத்தினுள் இலங்கை தபால் திணைக்களம் சார்ந்த பல்வேறு பதவிகளுக்காகப் புதிய ஆட்சேர்ப்புகள் மற்றும் நிரந்தரப் பதவி உயர்வுகள் பல வழங்கப்பட்டுள்ளதாகவும் தபால் மா அதிபர் குறிப்பிட்டார்.
குறிப்பாக, 2025 ஜூன் மாதத்தில் இலங்கை தபால் சேவையின் 378 உப தபால் அதிபர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்கச் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.
இந்த நிரந்தர நியமனமானது 2020 ஆம் ஆண்டிற்குப் பின்னர் உப தபால் அதிபர்களுக்கு வழங்கப்பட்ட முதலாவது நிரந்தர நியமனமாகும் எனவும் தபால் மா அதிபர் ருவன் சத்குமார மேலும் சுட்டிக்காட்டினார்.
