அரசியல்உள்நாடு

இலங்கை – சீனா இடையிலான பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை வலுப்படுத்த இணக்கம்

இலங்கைக்கும் – சீனாவிற்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகள் மற்றும் பாதுகாப்பினை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (28) இடம்பெற்றது.

முக்கிய சந்திப்பு பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் வளாகத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பிற்கு, அமைச்சர் ஆனந்த விஜேபால தலைமை தாங்கினார்.

இதில் இலங்கைக்கான சீனத் தூதுவர் கி சென்ஹாங் (Qi Zhenhong) தலைமையிலான தூதுக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இந்தச் சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவைப் பாராட்டியதுடன், பொதுப் பாதுகாப்பு மற்றும் சட்ட அமுலாக்கம், போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் திட்டமிட்ட குற்றங்களைக் கட்டுப்படுத்தல், தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல் போன்ற முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இதன்போது இலங்கையின் பொதுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக சீன மக்கள் குடியரசு வழங்கி வரும் ஒத்துழைப்புகளுக்கு அமைச்சர் ஆனந்த விஜேபால தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொண்டார்.

இதற்குப் பதிலளித்த சீனத் தூதுவர் கி சென்ஹாங், இலங்கையில் சட்டத்தின் ஆட்சியை (Rule of Law) உறுதிப்படுத்தவும், பொதுப் பாதுகாப்பை மேம்படுத்தவும் சீன அரசாங்கம் தொடர்ச்சியான ஆதரவை வழங்கத் தயாராக உள்ளதாக உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் பொலிஸ் மா அதிபர் சிரேஷ்ட சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய மற்றும் சீனத் தூதுக்குழுவின் பிரதிநிதிகள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Related posts

நிலக்கரி கப்பல் ஒன்று இன்றைய தினம் நாட்டுக்கு

நாடளாவிய ரீதியில் மீளவும் இன்று முதல் ஊரடங்கு அமுலுக்கு

சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான மழைவீழ்ச்சி