வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி கௌரவ அமைச்சர் வசந்த சமரசிங்க அவர்கள் பத்தாவது பாராளுமன்றத்துக்கான இலங்கை – ஓமான் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டார்.
கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில், இந்தச் சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் நேற்று (13) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
ஓமான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர், கௌரவ அஹமது அலி சையிட் அல்ராஷிதி அவர்கள் இக் கூட்டத்தில் கௌரவ அதிதியாகக் கலந்துகொண்டார். பல அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோரும் இதன்போது கலந்துகொண்டனர்.
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா அவர்கள் நட்புறவுச் சங்கத்தின் செயலாளராகவும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சத்துரி கங்கானி அவர்கள் சங்கத்தின் பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.
இந்தக் கூட்டத்தின் போது, 1981 ஆம் ஆண்டு முதல் பரஸ்பர மரியாதை மற்றும் பொதுவான நலன்களை அடிப்படையாகக் கொண்ட இலங்கைக்கும் ஓமானுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவை இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.
ஓமானிலுள்ள இலங்கை சமூகத்தின் பங்களிப்பும் இதன்போது சுட்டிக்காட்டப்பதுடன், இரு நாடுகளின் பொருளாதாரங்களுக்கு ஆதரவளிப்பதிலும் உறவுகளை வலுப்படுத்துவதிலும் அவர்களின் நேர்மறையான பங்களிப்பு பாராட்டப்பட்டது.
அத்துடன், சுற்றுலா, வர்த்தகம், தொழில் மற்றும் கல்வி உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் மேம்படுத்தப்பட்ட ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகள் குறித்து இதன்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
மீள ஸ்தாபிக்கப்பட்ட பாராளுமன்ற நட்புறவுச் சங்கம் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கும், பரஸ்பர நலன் சார்ந்த முயற்சிகளை முன்னேற்றவும் ஒரு பயனுள்ள தளமாகச் செயற்படும் என்று இரு தரப்பினரும் இதன்போது நம்பிக்கை வெளியிட்டனர்.
பாராளுமன்றத்திற்கான விஜயத்தின் போது ஓமான் நாட்டின் தூதுவர் அஹமது அலி சையிட் அல்ராஷிதி அவர்கள் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்ரமரத்ன அவர்களை மரியாதையின் நிமித்தம் சந்தித்தார்.
இந்தக் கலந்துரையாடலின் போது பாராளுமன்ற மட்டத்தில் விரிவாக்கப்பட்ட ஒத்துழைப்பை ஏற்படுத்துதல் உள்ளிட்ட இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.
