அரசியல்உள்நாடு

இலங்கை – அவுஸ்திரேலிய இடையே கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கையின் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு செயல்முறை தொடர்பான இருதரப்பு ஒப்பந்தங்களில், இலங்கை அரசாங்கமும் அவுஸ்திரேலிய அரசாங்கமும் இன்று (27) நிதி அமைச்சில் கையெழுத்திட்டுள்ளன.

இலங்கை அரசாங்கத்தின் சார்பில், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

அதேநேரம் அவுஸ்திரேலிய அரசாங்கம் சார்பில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராக பதவி ஏற்கவிருக்கும் மெத்திவ் டக்வர்த் (Matthew Duckworth) கையொப்பமிட்டார்.

இதன்மூலம் இலங்கையின் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் அதன் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் இலங்கை மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகளில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் எட்டமுடிந்துள்ளது.

அதிகாரப்பூர்வ கடன் வழங்குநர் குழுவுடன் எட்டப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு இணங்க, வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு செயல்முறையை சரியான நேரத்தில் முடிப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் உறுதியான அர்ப்பணிப்பை இந்த ஒப்பந்தங்கள் பிரதிபலிக்கின்றன.

ஆக்கப்பூர்வமான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஊடாக, நிலுவையில் உள்ள கடன்களை மறுசீரமைப்பதன் மூலம் இலங்கைக்கு கடன் நிவாரணம் வழங்க அவுஸ்திரேலிய அரசாங்கம் இணங்கியுள்ளது.

இந்த ஒப்பந்தங்களின் கீழ் மறுசீரமைக்கப்பட்ட மொத்த கடன் தொகை சுமார் 39 மில்லியன் அமெரிக்க டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இருதரப்பு ஒப்பந்தம் இலங்கையின் பொருளாதார நிலைத்தன்மையை நோக்கிய பயணத்திற்கு பங்களிப்பதுடன், இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான ஆழமான மற்றும் நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துகிறது.

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஆதரவுக்கும் ஒத்துழைப்புக்கும் இலங்கை அரசாங்கம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

CID க்கு அழைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார

editor

பிரதமர் தலைமையில் புத்தாண்டை முன்னிட்டு தலைக்கு எண்ணெய் வைக்கும் தேசிய நிகழ்வு

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு