வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கே உருவான ‘டிட்வா புயல் அடுத்த 48 மணித்தியாலங்களில் தமிழ்நாட்டின் ஊடாக இந்தியாவிற்குள் நுழையும் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக தமிழ்நாடு துறைமுகங்களுக்கு எச்சரிக்கை அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.
பலத்த புயலாக மாறியுள்ள ”டிட்வா’ தற்போது இந்தியாவின் புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேசத்தின் கொரமண்டல் கடற்கரையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால், டெல்டா மாவட்டங்கள், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (27) மாலை நிலவரப்படி ”டிட்வா’ புயல் மட்டக்களப்பில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் நகர்ந்து கொண்டிருந்தது.
சமீபத்திய வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிக அதிக மழைவீழ்ச்சி அடுத்த சில மணிநேரங்களில் எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
சீரற்ற வானிலையால் கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் 37 பேர் உயிரிழந்துள்ளதுடன், நவம்பர் 17ஆம் திகதி முதல் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது.
அனர்த்த நிலைமைகள் காரணமாக 21 பேர் காணாமல் போயுள்ளனர்.
இலங்கைக்கு தென்கிழக்கே காணப்பட்ட குறைந்த அழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்ததை அடுத்து, பல முக்கிய ஆற்றுப்படுகைகளின் தாழ்நிலப் பகுதிகளுக்கு நீர்ப்பாசனத் திணைக்களம் கடும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தது.
தற்போது 7 மாவட்டங்களில் உள்ள 58 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு தொடர்பான வெளியேறும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
