உள்நாடுவிசேட செய்திகள்

இலங்கையின் மீட்சிக்கும், மீளெழுச்சிக்கும் உதவத் தயார் – IMF நிறைவேற்றுப் பணிப்பாளர்

மிகமோசமான வெள்ளப்பெருக்கினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பில் கவலையை வெளிப்படுத்தியிருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா, இலங்கையின் மீட்சிக்கும் மீளெழுச்சிக்கும் அவசியமான ஆதரவை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

‘டிட்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் இலங்கை மிகமோசமான பேரழிவுக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், இலங்கையுடனான உடன்நிற்பை வெளிப்படுத்திவரும் சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புக்கள், இலங்கைக்கு நிவாரண உதவிகளையும் வழங்கி வருகின்றன.

அதற்கமைய இலங்கை உள்ளடங்கலாக பாரிய அனர்த்தத்துக்கு முகங்கொடுத்திருக்கும் நாடுகள் தொடர்பில் கவலையை வெளிப்படுத்தி சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா அவரது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார்.

‘மிகமோசமான வெள்ளப்பெருக்கினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தோனேசியா, மலேசியா, இலங்கை, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் மக்கள் தொடர்பில் மிகுந்த கரிசனை அடைகிறோம்’ என அவர் அப்பதிவில் தெரிவித்துள்ளார்.

அத்தோடு இவ்வனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் அதேவேளை, இந்நாடுகளின் மீட்சிக்கும், மீளெழுச்சிக்கும் அவசியமான ஆதரவை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

‘கோட்டாபய விரைவில் நாடு திரும்புவார்’ – சாகர

நேற்று 650 பேருக்கு கொரோனா தொற்று

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய கலந்துரையாடல் இன்று