உள்நாடு

இலங்கையின் ‘கல்யாணி பொன் நுழைவு’ இன்று மக்கள் பாவனைக்கு

(UTV | கொழும்பு) – ‘கல்யாணி பொன் நுழைவு’ என பெயர் சூட்டப்பட்டுள்ள, இலங்கையில் முதற்தடவையாக உயர் தொழில்நுட்ப கம்பிகள் மேல் அமைக்கப்பட்டுள்ள புதிய களனி பாலம் இன்று (24) திறந்து வைக்கப்படவுள்ளது.

இன்று மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரால் இந்தப் பாலம் திறந்து வைக்கப்படவுள்ளது.

2014 ஆம் ஆண்டு இலங்கையில் முதற்தடவையாக அதியுயர் தொழில்நுட்ப கம்பிகளைப் பயன்படுத்தி புதிய களனி பாலம் அமைக்கும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக பெருந்தெருக்கள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதன் பின்னர் பழைய களனி பாலத்துக்கு அண்மையில், ஆறு வழித்தடங்களைக் கொண்ட புதிய பாலம் அமைக்கும் பணி பெருந்தெருக்கள் அமைச்சு மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மூலம் ஆரம்பிக்கப்பட்டது.

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை ஆரம்பிக்கும் இடத்திலிருந்து பேலியகொடை பாலத்தின் சந்தியை மையமாகக்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் புதிய களனி பாலம் அமைக்கும் திட்டம், ஒருகொடவத்த சந்தியிலும், துறைமுக நுழைவு சந்தியிலும் நிறைவடைகின்றது.

கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கொழும்பு பக்க முடிவிலிருந்து பண்டாரநாயக்க சுற்றுவட்டப் பாதை வரை ஆறு வழித்தடங்களைக்கொண்ட இந்தப் பாலம், அங்கிருந்து ஒருகொடவத்த, இங்குருகடைசந்தி மற்றும் துறைமுக நுழைவு பாதை வரையில் நான்கு வழித்தடங்கள் கொண்ட பாதையாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

களனி கங்கைக்கு குறுக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தின் நீளம் 380 மீற்றராகும்.

இந்தப் பாலம் இரண்டு தொகுதியின் கீழ் அமைக்கப்பட்டது. முதலாவது தொகுதியில் உருக்கினாலான பாலத்தின் பகுதிக்கு 31, 539 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதுடன், இரண்டாவது தொகுதியில் கொங்கிறீட் தொங்கு பாலம் பகுதிக்கு 9, 896 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் நிதி பங்களிப்புடன் இந்தப் பாலம் அமைக்கப்பட்டுள்ளதாக பெருந்தெருக்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

கஞ்சிபானி இம்ரானின் தந்தை மீது தாக்குதல் – சந்தேகநபர் விளக்கமறியலில்

இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் – அமெரிக்கா நம்பிக்கை.

UTV நடாத்தும் குறுந்திரைப்படப் போட்டி – 2024 || UTV Short Film Competition 2024