அரசியல்உள்நாடு

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவரை சந்தித்தார் ஹிஸ்புல்லாஹ் எம்.பி

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி அவர்களை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் இன்று (8) கொழும்பிலுள்ள சவூதி தூதரகத்தில் உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.

இச்சந்திப்பின்போது, பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள், சவூதி அரேபியா – இலங்கை இடையிலான நீண்டகால நட்புறவை நினைவுகூர்ந்ததுடன், சவூதி அரசாங்கம் தொடர்ந்து வழங்கிவரும் பல்வேறு உதவிகளுக்காக நன்றிகளைத் தெரிவித்தார்.

மேலும், இலங்கையிலுள்ள பள்ளிவாசல்கள் மற்றும் பொது நிறுவனங்களுக்கு கூடுதல் உதவிகள் வழங்கப்படவேண்டும் என்பதோடு, முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார திணைக்களத்தின் பணி மேலும் திறம்பட நடைபெறுவதற்கான வசதிகள், உலமாக்கள், முஅத்தின்கள், இமாம்களுக்கு பயிற்சி வழங்கும் நிறுவனம் அமைத்தல், அரபுக் கல்லூரிகளில் விஞ்ஞான, தொழில்நுட்பக் கல்வியை விரிவுபடுத்துதல் போன்ற முயற்சிகளுக்கு சவூதி அரசாங்கத்தின் வழிகாட்டுதலும் ஆதரவும் தேவைப்படுகின்றன.

இலங்கையில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கக்கூடிய வல்லமை வாய்ந்த நிறுவனமாக அந்தத் திணைக்களம் செயல்படுவதற்கு சவூதி அரசின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதனுடன், ஹஜ் யாத்திரைக்கான இலங்கையின் ஹஜ் கோட்டா அதிகரிக்கப்படவேண்டும் என்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு ஆண்டும் ரமழான் காலங்களில் இலங்கைக்கு வழங்கப்படும் பேரீச்சம்பழங்களின் அளவை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.

அத்தோடு, பலஸ்தீன் போன்ற பல நாடுகளுக்கு வழங்கிவரும் மனிதாபிமான உதவிகளுக்கும், மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்த முயற்சிப்பதற்கும் சவூதி அரசாங்கத்திற்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

இலங்கை மக்களின் சார்பாக, சவூதி அரசின் பெருந்தாராளமான உதவிகளுக்காக தூதுவர் காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த தூதுவர், இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தன்னால் இயன்ற வரையில் தொடர்ந்து செய்து வருவதாக உறுதியளித்தார்.

இச்சந்திப்பு, இலங்கை – சவூதி நட்புறவை மேலும் வலுப்படுத்துவதோடு, நாட்டிலுள்ள முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால முன்னேற்றத்திற்கும் பெரும் நன்மை பயக்கக்கூடிய ஒன்றாகும்.

-எஸ். சினீஸ் கான்

Related posts

“GotaGo போராட்டம் முடிவுக்கு”

சில பிரதேசங்களுக்கு 12 மணி நேர நீர்வெட்டு

அரசாங்கம் மற்றுமொரு நாடகத்தை அரங்கேற்றுகிறது – சஜித்.