இன்று, மக்கள் மிகுந்த அச்சத்திலும் சந்தேகத்திற்கு மத்தியிலும் வாழ்ந்து வருகின்றனர். இதற்குக் காரணம், நாட்டின் கொலைகாரக் கும்பல்கள், பாதாள உலகக் கும்பல்கள், குண்டர்கள், T-56 தோட்டாக்கள், பயோனெட்டுகள் சமூகத்தை ஆட்கொண்டுள்ளன.
நாட்டின் சட்டம் அமுலில் இல்லை. முற்றத்திலும், வீட்டிலும், வேலை செய்யும் இடங்களிலும், தெருக்களிலும், நீதிமன்றத்திலும் கூட கொலைகள் நடக்கின்றன. சமீபத்திய மாதங்களில் அதிக எண்ணிக்கையிலான கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன.
கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது இது ஒரு சாதாரண நிலைமை என அரசாங்கம் கூறுகிறது.
முறைமையில் மாற்றத்தைக் கொண்டு வந்து, 2 மாதங்களில் பாதாள உலகத்தை அழிப்பதாக அரசாங்கம் குறிப்பிட்டது.
ஆனால் நாட்டில் தினமும் கொலைகள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.
தமது இயலாமையை நியாயப்படுத்தாது மக்களை வாழ வைப்பதே ஆட்சியாளரின் பொறுப்பாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மாத்தறை மாவட்டத்தின் கம்புருபிட்டிய தேர்தல் தொகுதிக்குட்பட்ட, கம்புருபிட்டிய பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள நாகந்தபுர மாதிரி கிராமத்து மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொள்ளும் முகமாக அப்பிரதேசத்திற்கு இன்று (14) விஜயம் செய்த போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
ஆட்சியாளர் என்பவர் மக்கள் மத்தியில் சென்று மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க வேண்டும். நடமாடும் சேவைகளை மக்களுக்காக நடத்துவது எதிர்க்கட்சித் தலைவரின் பொறுப்பு மட்டுமல்ல, நாட்டின் ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் பொறுப்பாகும். மக்களிடம் தீர்வுகளுடன் செல்ல வேண்டும். என்றாலும், தற்போதைய அரசாங்கம் அந்த வழியில் மக்களிடம் சென்றபாடில்லை.
என்பதால், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, மக்களின் பிரச்சினைகளைக் கேட்டு, அவர்களின் துயரங்களையும் வலிகளையும் வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்குவதற்கான ஏற்பாட்டைச் செய்துள்ளது.
இவ்வாறு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கும் ஒரு கட்டமைப்பை உருவாக்க நாம் நடவடிக்கை எடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மக்களின் பிரச்சினைகளை அடையாளம் காணவும், இந்தக் கிராமங்களில் வாழும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த புரிதலைப் பெறவும் இதனால் முடியும்.
வீதி வசதிகள், விவசாயம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், நீர்ப்பாசன கட்டமைப்புகள் தொடர்பான பிரச்சினைகள், ஆரம்ப பிரிவு பாடசாலைகளில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் பிரதேச மருத்துவமனைகளில் உள்ள பிரச்சினைகள் உள்ளிட்ட 10 அம்சங்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது கவனம் செலுத்தினார்.
இம்மாதிரி கிராமங்களில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவற்றை பாராளுமன்றத்தினதும் அரசாங்கத்தினதும் கவனத்துக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்போம்.
அவற்றுக்கான தீர்வுகளைக் காணவும் முயற்சிகளை எடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.