உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து பல சந்தர்ப்பங்களில் விரிவாக கலந்துரையாடி, விடயங்களை முன்வைத்துள்ளோம். 2021, 2023 மற்றும் 2024 இல் நடந்த விவாதங்கள் ஊடாகவும், நிலையியற் கட்டளை 27 (2) கேள்விகள் மூலமும் பல விடயங்களை முன்வைத்துள்ளேன். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த உண்மையைக் கண்டறிய, தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள சூத்திரதாரிகளையோ அல்லது சூத்திரதாரியையோ கண்டுபிடிக்க மாற்று முறைமையொன்றைப் பின்பற்ற வேண்டும். விடயங்கள் மற்றும் தகவல்கள் தொடர்பில் விரிவாக விவாதித்திருந்தாலும், உண்மையைக் கண்டறிவதற்கான தெளிவான வழிமுறை மற்றும் வேலைத்திட்டமொன்று முக்கியமானது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
2024 ஏப்ரல் மாதம் நானும், ஐக்கிய மக்கள் சக்தியின் சட்ட நிபுணர் குழுவும் கார்டினலைச் சந்தித்து, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பில் நாம் கையாளும் 6 அம்ச விடயங்கள் குறித்து கலந்துரையாடினோம். இந்த 6 அம்சங்கள் குறித்து ஏலவே பாராளுமன்றத்திலும் கருத்து வெளியிட்டுள்ளேன் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
01- விசேட விசாரணை ஆணைக்குழு அமைத்தல். 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க விசாரணை ஆணைக்குழுச் சட்டத்தின் பிரிவு 2 இன் பிரகாரம், 7 அல்லது 9 அங்கத்தவர்களைக் கொண்ட ஒரு ஆணைக்குழுவை தாபிக்கலாம் என்று கூறுகிறது. இந்த நோக்கத்திற்காக, தேசிய மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் சர்வதேச நிபுணர்களை உள்ளடக்கிய ஆணைக்குழுவை தாபிக்க வேண்டும்.
02- நிரந்தர விசாரணை அலுவலகத்தை தாபித்தல். விசாரணைகளை துல்லியமாகவும், நேர்மையாகவும், உண்மையாகவும் முன்னெடுக்க விசாரணை அலுவலகமொன்றை தாபித்தல்.
03- இந்த விசாரணை அலுவலகத்தின் பணிகளை முன்னெடுப்பதற்கான வேலைத்திட்டமொன்றும் தேவை.
04- சட்டமா அதிபரால் குற்றவியல் வழக்குகளைத் தாக்கல் செய்தல்.
05- இந்த வேலைத்திட்டத்திற்குள் விசேட நீதிமன்றத்தைத் தாபித்தல்.
06- அரச வழக்கறிஞர் அலுவலகமொன்றை தாபித்தல்.
இந்த நடவடிக்கைக்கு கார்டினல் அவர்களும் இணக்கம் தெரிவித்திருந்தமையால் இதனை பாராளுமன்றத்திலும் முன்வைத்துள்ளேன்.
என்றாலும் இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்கு மக்கள் ஆணை எமக்கு கிடைக்கவில்லை. ஆகையால் இந்த 6 அம்ச முன்மொழிவை இவ்வாறு மீண்டும் ஒருமுறை முன்வைக்கிறேன்.
இவ்விவகாரம் இன்று முழுமையாக அரசியல்மயமாக்கப்பட்டுள்ளது. இதன் உண்மையைக் கண்டறிவது அவசியமாகும்.
2021, 2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற சபை ஒத்திவைப்பு மீதான விவாதங்கள், நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் உண்மையைத் தேடுவதற்கே கேள்விகளை எழுப்பினேன்.
இன்றைய நோக்கமும் அதுவாகவே இருப்பதால், இந்த நடவடிக்கையில் கவனம் செலுத்துமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இன்று (09) பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
🟩 உண்மையைத் தேடிச் செல்லும் நடவடிக்கையை இனிமேலும் தடுக்காதீர்கள்.
உண்மையைக் கண்டறியும் செயல்முறைக்கு கடந்த காலங்களில் பல தடைகள் ஏற்படுத்தப்பட்டன. அதிகாரிகளின் இடமாற்றங்கள், பழிவாங்கல்கள் மற்றும் அதிகாரிகளை சிறையில் அடைத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் மூலம் தாக்குதல்களுக்குப் பின்னால் காணப்படும் உண்மையைக் கண்டறிவதைத் தடுக்கவே இவை முன்னெடுக்கப்பட்டன. எனவே, அரசியல் மற்றும் பழிவாங்கலை ஒதுக்கி வைத்துவிட்டு, நேர்மையாகவும், இதய சுத்தியுடனும், பாரபட்சமின்றியும் இந்தத் வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கிறேன்.
இந்த வேலைத்திட்டத்தின் நம்பகத்தன்மையை நாடு வேண்டி நிற்கிறது. விசேட விசாரணை ஆணைக்குழுவிற்கு தேசிய மற்றும் வெளிநாட்டு நீதிபதிகளை ஈடுபடுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நிலையான விசாரணை அலுவலகம் இயங்கும் போது, ஸ்காட்லாந்து யார்ட் மற்றும் எப்.பி.ஐ போன்ற நிறுவனங்களின் ஆதரவைப் பெறுவதன் மூலம் உண்மையைக் கண்டறியும் பணியை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
🟩 சகல கத்தோலிக்கர்களுக்கும் நீதியை நாட்டுங்கள்.
இந்த விசாரணைக்கு இன்னும் தெளிவான தீர்வு முன்வைக்கப்படவில்லை. இந்த துயரத்தால் பாதிக்கப்பட்டுள்ள கத்தோலிக்க சமூகமும் ஒட்டுமொத்த பொதுமக்களும் பெரும் சந்தேகத்தின் மத்தியில் காணப்படுகின்றனர்.
அரசாங்கத்திடமிருந்து நியாயமானதொரு சமிக்ஞை கிடைத்தால் கார்டினல் கூட மகிழ்ச்சியடைவார். அவ்வாறு இல்லையெனில், மீண்டும் வீதிகளில் இறங்க வேண்டி வரும் என்றும் கார்டினல் தெரிவித்துள்ளார்.
முறைமையில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கே இந்த அரசாங்கம் ஆட்சிக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாவிட்டால், மீண்டும் யோசிப்பேன் என்றும் கார்டினல் கூறியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் 6 ஆவது ஆண்டு நிறைவிற்கு முன்னர் நீதி வழங்கப்படாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்றும் கத்தோலிக்க மக்கள் கூறியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
🟩 அன்றும், இன்றும், நாளையும் நாங்கள் உண்மைக்காக முன்நிற்போம்.
எனவே, உண்மையை விரைவாகக் கண்டறிய வேண்டும். பயங்கரவாதத் தாக்குதலால் தான் நானும் எனது தந்தையை இழந்தேன்.
பயங்கரவாதத் தாக்குதல்களை நான் வன்மையாக எதிர்க்கிறேன். இந்த பேரவலத்திற்கு காரணமான சகலரையும் நீதியின் முன் நிறுத்தங்கள்.
இது தொடர்பாக பல்வேறு அதிகாரிகள் விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது, அவர்கள் மீது அழுத்தம் கொடுத்து அவர்களை சிறையில் அடைக்கும் போது உண்மை வெளிப்படாது.
ஆகவே உண்மையைக் கண்டறிய அனைவரும் விசாரணை விடயத்தில் உண்மைக்காக வேண்டி முன்நிற்க வேண்டும்.
ஐக்கிய மக்கள் சக்தி அன்றும், இன்றும், நாளையும் இதன் உண்மைக்காக முன்நிற்கும். உண்மையை வெல்ல, சரியான வேலைத்திட்டத்தை முன்னெடுக்க இந்த அரசாங்கத்திற்கு இயலுமை கிட்டட்டும் என பிரார்த்திக்கின்றேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.