இலங்கை மின்சார சபையை (CEB)நான்கு பகுதிகளாகப் பிரிக்கும் அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து அதன் பொறியலாளர் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள சட்டப் படி வேலை செய்யும் போராட்டம் இன்று (16) முதல் தீவிரப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை பொறியாளர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் தனுஷ்க பராக்கிரமசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட சட்டப்படி வேலை நிறுத்தும் போராட்டத்தின் முதற்கட்டமானது நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், அதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதற்கு தமது சங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் இந்த தொழிற்சங்க நடவடிக்கையால் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்த தமது சங்கம் எதிர்பார்க்கவில்லை என்று சுட்டிக்காட்டிய அவர், அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே இது திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதன்படி, எதிர்காலத்தில், வேலைக்கு மேலதிகமாக டெண்டர் குழுக்களில் இணைதல், ஏனைய குழுக்களில் இருந்து விலகல் போன்றவற்றை முன்னெடுத்து அரசாங்கத்திற்கு ஒரு செய்தியை தெரிவிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அனைத்து ஊழியர்களும் நாளை (17) மற்றும் நாளை மறுநாள் இரண்டு குழுக்களாக சுகவீன விடுமுறையில் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், அந்த இரண்டு நாட்களில் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் தொழிற்சங்க போராட்டம் காரணமாக அலுவலகங்கள் மூடப்படவோ அல்லது வேறு எந்த செயல்முறைகளும் பாதிக்கப்படவோ மாட்டாது என்றும் இலங்கை மின்சார சபை பொறியாளர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் தனுஷ்க பராக்கிரமசிங்க குறிப்பிட்டார்