அரசாங்கமும் ஜே.வி.பி.யின் பிரதிநிதிகளும் நமது நாட்டில் வெளிப்படைத்தன்மையுடனும் பாரபட்சமற்ற முறையிலும் இதுவரை காலமும் செயற்பட்டு வந்த இளைஞர் சேவைகள் மன்றத்தையும், இளைஞர் சம்மேளனத்தையும் பூரணமாக அரசியல்மயமாக்கி வருகின்றனர்.
இளைஞர் சேவைகள் மன்றத்தையும், இளைஞர் சம்மேளன பிரதேச சம்மேளனங்களையும் மக்கள் விடுதலை முன்னணியின் நிரந்தரக் கிளையாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
Citizen Voice (மக்கள் குரல்) வேலைத்திட்டத்தின் கீழ் இளைஞர் சம்மேளன உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (30) நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு கருத்தும் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
இனம், மதம், சாதி, வர்க்கம் மற்றும் கட்சி அடிப்படையில் எந்த பாகுபாடும் இல்லாமல், கிராமப்புறத்தில் இருந்து, மாகாணம், மாவட்டம் மற்றும் தேசிய மட்டங்களுக்கு, கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை ஜனநாயக ரீதியாக முன்னேறி வந்த, தேசிய மட்டங்களில் கால் பதித்த நமது நாட்டின் இளைஞர்களுக்காக தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இதுவரை காலமும் செயல்பட்டு வந்திருக்கிறது.
இளைஞர் யுவதிகள் தங்கள் திறமைகள், ஆற்றல்கள், சேவைகள் மற்றும் செயல்முனைப்பு மூலம் கீழ் மட்டத்தில் இருந்து மேல் மட்டம் நோக்கி முன்னேறும் வாய்ப்பைத் தந்து கொண்டிருந்த தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றத்துக்கு இன்று அரசியல் தடையாக அமைந்து காணப்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சுயாதீனமாக செயற்படும் இளைஞர்களை ஜேவிபியின் அடிவருடிகளாக மாற்றும் வெட்கக்கேடான அரசியல் போக்கை நாங்கள் நிராகரிக்கிறோம்.
தேசிய இளைஞர் சேவை மன்றம், தேசிய இளைஞர் சம்மேளனம் ஆகியவற்றைச் சேர்ந்த சுயாதீனமாக செயல்படும் இளையோர்களை தமது அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜேவிபியிற்கு கீழ்ப்படிதல் காணப்படும் அடிவருடிகளாக மாற்றும் வெட்கக்கேடான அரசியல் போக்கை நாம் நிராகரிக்கிறோம்.
இளைஞர் கழகங்களினது முன்னாள் உறுப்பினர்கள், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற முன்னாள் உறுப்பினர்கள், இளைஞர் சம்மேளன முன்னாள் உறுப்பினர்களை ஒரே கூடையின் கீழ் ஒன்று திரட்டி, இளைஞர்களினது சுயாதீன செயல்பாட்டுக்கு இடமளிக்கும் ஜனநாயகப் போராட்டத்தை முன்னெடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சுயாதீன நிறுவனங்கள் இன்று அரசியல் மயமாக்கப்பட்டுள்ளன.
பாரபட்சமற்ற இந்த நிறுவனங்கள் இன்று அரசியலால் நாசமாக்கப்பட்டுள்ளன. தமது திறமையாலும் ஆற்றலாலும் அடிமட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை செல்வதற்கு இளைஞர்களுக்கு காணப்பட்டு வந்த வாய்ப்பு இன்று இல்லாதுபோயுள்ளது. அரசியல்வாதிகளால் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்களின் பட்டியல்களின் அடிப்படையில் இந்தப் பதவிகள் நியமிக்கப்பட்டு வருகின்றன.
இங்கு ஜனநாயக செயல்முறை மீறப்பட்டுள்ளது. எம்.பி.க்களும் அமைச்சர்களும் அனுப்பும் பட்டியல்கள் மூலம் நியமனங்களைச் செய்யும் கீழ் தர மட்டத்திற்கு இந்த அரசாங்கம் தற்போது வந்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்த மோசமான ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.
கிராமத்தில் சிவில் பாதுகாப்பு குழுக்கள் கூட இன்று அரசியல் மயமாக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில், மரண சங்கங்கள், கிராமிய அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் மாதர் சங்கங்கள் கூட இந்த அரசியல்மயமாக்களுக்கு ஆளாகக்கூடும்.
இளைஞர் சம்மேளனங்களினது அதிகாரத்தை எவ்வாறேனும் கைப்பற்றுமாறு ஜே.வி.பி தெளிவான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
ஜனநாயக கட்டமைப்பிற்குள் இதைச் செய்ய முடியாது. நாட்டில் காணப்படும் சகல ஜனநாயக்க் கட்டமைப்புகளையும் குறிப்பிட்டதொரு நியாயாதிக்கத்தின் கீழ் அடிபணிபயச் செய்யும் மோசமான மேலாதிக்க போக்கை இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
இது ஜனநாயக விரோத போக்காகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.