நாட்டின் மின்சார நுகர்வோருக்கு குறைந்த விலையில் மின்சாரத்தைப் பெற்றுத் தருவதும், சுத்தமான எரிசக்தியை முன்னெடுத்து வருவதும் நாட்டின் தேசிய நிகழ்ச்சி நிரலின் பிரதான நோக்கங்களாக அமைந்து காணப்பட வேண்டும்.
இதன் பொருட்டு, நாட்டின் எரிசக்தித் துறையையும், மின்சாரத் துறையையும் மறுசீரமைத்து, வலுவான ஒழுங்குபடுத்தலுக்கு உட்படுத்தி, தேசிய பாதுகாப்பு இலக்குகளையும் எட்டிக் கொண்டு வலுச்சக்தித் துறைக்குத் தேவையான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டை கவரும் சீர்திருத்தமொன்றுக்கு செல்ல வேண்டும்.
ஆனால் தற்போதைய அரசாங்கம் இதையெல்லாம் மறந்துவிட்டு, மின்சார நுகர்வோரை அழிக்கும் மின்சாரச் சட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.
2025 மின்சார திருத்தச் சட்டம் இவற்றை கருத்திற் கொண்டுள்ளதா என்பதில் பிரச்சினை காணப்படுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (06) நடந்த மின்சார திருத்தச் சட்டம் 2025 மீதான விவாதத்தின் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
இந்த சட்டமூலம் ஊடாக நுகர்வோர் பாதுகாப்பு ஒழுங்குமுறை பொறிமுறையை பலவீனப்படுத்தி, முதலீட்டிற்குத் தேவையான சந்தர்ப்பங்களைக் கூட நீக்கி, மின்சாரத் துறையில் காணப்படும் 23,000 ஊழியர்களின் உரிமைகள் குறித்துப் பேசுவதற்குக் கூட மின்சாரத் துறைக்குப் பொறுப்பான வலுச்சக்தி அமைச்சர் கூட நேரம் கொடுக்கிறார் இல்லை.
எனவே, இந்த சட்ட மூலம் நாட்டின் மின்சாரத் துறையை வலுப்படுத்துமொரு சட்டமூலமாக அமைந்து காணப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
2002 ஆம் ஆண்டு இதற்கான மறுசீரமைப்புகள் ஆரம்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் அன்று இதனை எதிர்த்தனர்.
2024 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சில திருத்தச் சட்டத்திற்கு அதில் காணப்பட்ட பிற்போக்குத்தனமான தன்மை காரணமாக ஐக்கிய மக்கள் சக்தி தனது எதிர்ப்பை தெரிவித்தது. இன்று சமர்ப்பிக்கப்பட்ட இந்த சட்ட மூலம் மின்சாரத் துறையை உண்மையிலேயே பேரழிவின் விளிம்பிற்கு அழைத்துச் செல்லும் ஒன்றாக காணப்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்த அரசாங்கம் எரிசக்தி மாபியாவில் சிக்கி விட்டது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவிப்பதாகக் கூறி இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால் இன்று, இந்த அரசாங்கம் அனல் மின் நிலைய மாபியாவின் கைதியாக மாறி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையை வேண்டுமென்றே அழித்து வருகிறது.
சஹஸ்தனவி வேலைத்திட்டம் ஊடாக 300 மெகாவாட் இரட்டைப் பயன்பாட்டு மின் நிலையமாக மேம்படுத்துவதற்கான திட்டத்திற்கு 2025 ஜனவரி 31, அன்று அனுமதியை வழங்கியுள்ளது.
உண்மைக்கு மாறான தவறான தரவுகளின் அடிப்படையில் இந்தத் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தவறான தரவுகளின் அடிப்படையில் பல ஒப்பந்தங்கள் எட்டப்பட்டுள்ளன.
ஒரு லீட்டர் டீசலின் விலை ரூ.110 ஆக கருதி உற்பத்திக்கான அலகொன்றின் செலவு ரூ. 20.15 என கணக்கிடப்பட்டுள்ளது.
டொலரின் மதிப்பு ரூ.195 என்றே கருதப்பட்டிருக்கிறது. அச்சமயம், ஒரு லீட்டர் டீசலின் விலை ரூ.286 ஆகவும், மாற்று விகிதம் ரூ.300 ஆகவும் காணப்பட்டது.
இந்தப் பிழை குறித்து பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு ஏப்ரல் 3 ஆம் திகதி வலுச்சக்தி அமைச்சின் செயலாளருக்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்திருந்தது. ரூ. 35.81, ரூ. 43.25, மற்றும் ரூ. 72.11. என 3 சந்தர்ப்பங்கள் குறித்தி பேசி, இந்தத் தவறான தரவுகளின் அடிப்படையில் சமர்ப்பிக்கப்பட்டு, அங்கீகாரம் வழங்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் குறித்து அமைச்சரவைக்குத் தெரிவிக்குமாறு கூறப்பட்டிருந்தாலும் கூட, தற்போதைய அரசாங்கம் அவற்றை கருத்திற் கொள்ளாது, ஏப்ரல் 3 அல்லது 4 ஆம் திகதி மின்சார சபைக்கும் LTL க்கும் இடையே மின்சார கொள்முதலை மேற்கொள்ளும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
சூரிய வலுச் சக்தியின் மீதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவிப்போம் என தேர்தல் சமயத்தில் ஆளும் தரப்பினர் நாட்டிற்கு உரத்து கூறினர்.
ஆனால் கூரைகள் மீது பொருத்தப்படும் சூரிய மின் அமைப்புகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சார அலகு ஒன்றிற்கு வழங்கப்பட்ட கட்டணத்தை முந்தைய அரசாங்கம் ரூ.37 லிருந்து ரூ.27 ஆகவும், இந்த அரசாங்கம் ரூ.19 வரையிலும் குறைத்துள்ளன.
இது சூரிய சக்தி துறையின் மீது விழுந்த பெரும் மரண அடியாகும். ஜேவிபி கொள்கை அறிக்கையில் 5 ஆண்டுகளுக்குள் 2000 மெகாவாட் மின்சாரம் இணைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், அப்பாவி தொழில்முனைவோர் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர். பலர் சூரிய சக்தி பாவனைக்கும் உற்பத்திக்கும் திருப்பினர்.
இன்று அவர்கள் அனாதைகளாக்கப்பட்டுள்ளனர். சூரிய ஆற்றலுக்காக 680 நிறுவனங்கள் இலங்கை நிலைபெறுதகு வலு எரிசக்தி அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் நேரடி மற்றும் மறைமுகமாக ஒரு இலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்.
இவர்கள் மூலம் கூரைகள் மீது அமைந்து காணப்படும் சூரிய மின் உற்பத்தி அமைப்புகள் மூலம் 1709 மெகாவாட் மின்சாரத்தையும், தரையில் அமைந்து காணப்படும் சூரிய மின் உற்பத்தி அமைப்புகள் மூலம் 140 மெகாவாட் மின்சாரத்தையும் பெற்றுத் தருகின்றனர். அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை அவர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை தற்போதைய அரசாங்கம் ஒவ்வொன்றாக மீறி வருகின்றது.
அரசாங்கமானது புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையை அழித்து வரும் அதேவேளையில், நாட்டின் நுகர்வோருக்கு வழங்கிய வாக்குறுதிகளை நாளாந்தம் மீறி வருகின்றது.
தேர்தல் மேடையில் தற்போதைய ஆளுந்தரப்பினர் மின்சாரக் கட்டணத்தை ரூ. 9000 லிருந்து ரூ.6000 வரை, 33% ஆல் குறைப்போம் என பிரஸ்தாபித்தனர். ஆனால் இன்று, இவர்கள் ஆட்சிக்கு வந்ததன் பிற்பாடு, மின்சாரக் கட்டணத்தை அதிகரித்துள்ளனர். IMF நிபந்தனைகள் காரணமாகவே இதனை செய்துள்ளனர்.
IMF இணக்கப்பாடுகளில் திருத்தங்களை கொண்டு வருவோம் என கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம், ஆட்சிக்கு வந்த பிறகு முந்தைய அரசாங்கம் பின்பற்றிய குறித்த IMF இணக்கப்பாட்டில் ஒரு வார்த்தையைக் கூட மாற்றாமல் அதனை அவ்வாறே முன்னெடுத்து வருகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
இன்று அரசாங்கத்தை விட மக்களே என்ன செய்வதென்று அறியாத நிலையில் காணப்படுகின்றனர்.
இந்த சட்டமூலம் ஊடாக எதிர்பார்க்கப்படும் மறுசீரமைப்புகள் நடக்காது. நேரடி மற்றும் தனியார் முதலீடுகள் கிடைக்காது. சூரிய மின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழில்முனைவோர்களுக்கு கிடைக்கும் கட்டண குறைப்பு காரணமாக அம்முயற்சிகளில் ஈடுபட்டு வந்தோர் நிதி சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.
இதனால் சூரிய மின் உற்பத்தியிலிருந்து விலகிச் செல்லும் போக்கு ஆரம்பித்திருப்பதை காண்கிறோம். தமது கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையை இவர்கள் எட்டியுள்ளனர்.
முற்போக்கான எதிர்க்கட்சியாக, ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய மக்கள் கூட்டணியும்
புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு வழங்க முடியுமான கூடிய முன்னுரிமையை பெற்றுத் தரும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.