தற்போதைய அரசாங்கம் தேர்தல் மேடையில் இடது பக்கம் சிக்னல் போட்டு, தற்போது வலது பக்கமாக சென்று கொண்டு, எத்தகைய கலந்துரையாடல்களையும் நடத்ததாது பொருளாதார மத்திய நிலையங்களை தனியார் நிறுவனங்களுக்கு கையளிக்கும் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இதில் கட்டமைப்பு சார் மாற்றமொன்றை மேற்கொள்வதாக இருந்தால், வெளிப்படையாகவும் பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும்.
என்றாலும், எந்த பேச்சுவார்த்தைகளும் இணக்கப்பாடுகளும் எட்டப்படாமல் இதனை முன்னெடுக்க விளைவதன் காரணமாக இந்த முயற்சி தொடர்பில் பல சந்தேகங்கள் எழுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இந்த விவகாரத்தை பாராளுமன்றத்தில் முன்வைத்து, கேள்வி எழுப்புவேன்.
அரசாங்கம் இந்த விடயத்தில் தன்னிச்சையாக செயல்பட முடியாது. அரசாங்கம் பாராளுமன்றத்தில் எனது பேச்சுச் சுதந்திரத்தை பறித்தாலும், இந்த விடயங்களை முன்வைப்பேன்.
இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதிப்பது ஜனநாயகத்துக்கு விரோதமான செயலாகும். மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முன்வைத்து நேர்மறையான தீர்வுகளை தேடுவதற்கு நாடினாலும், அரசாங்கம் எனது பேச்சுரிமையை அனுமதிக்க மறுப்பது ஜனநாயக விரோத செயல் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தக சங்க உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகளுடன் இன்று (19) நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
விவசாயிகளுக்கான விதைகள், உரங்கள் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான இரசாயன பதார்த்தங்கள் போன்ற முக்கிய பொருட்கள், உபகரணங்கள் தொடர்பான விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுக்க ஐக்கிய மக்கள் சக்தியாகிய நாம் முயற்சித்த போதிலும், எமக்கு மக்களின் ஆணை கிடைக்கவில்லை. விவசாயிகளை கோலோட்ச வந்த இந்த அரசாங்கம் விவசாயிகளை அழித்து வருகிறது.
குறைந்தபட்சம் அறுவடைகளுக்கான உத்தரவாத விலைகள் கூட விவசாயிகளுக்கு கிடைத்தபாடில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் முற்றுலுமாக மீறப்பட்டுள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.