இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில், டேராடூன் நகர் மற்றும் அருகேயுள்ள இடங்களில் நேற்று செவ்வாய்க்கிழமை (16) காலை திடீரென கடும்மழையும், மேகவெடிப்பும் ஏற்பட்டுள்ளது.
இதனால் 15 பேர் உயிரிழந்துள்ளதோடு, 16 பேர் காணாமல் போயுள்ளனர்.
மேலும் மலைப்பகுதியின் பல்வேறு இடங்களில் 900 பேர் சிக்கித் தவித்துள்ளனர்.
கார்வால் பகுதியில் பெய்த தொடர் மழையால், வீதிகள், பாலங்கள், ஹோட்டல்கள் மற்றும் கடைகள் என பரவலாக சேதம் அடைந்துள்ளன. பல்வேறு மாவட்டங்களில் வாகன போக்குவரத்தும் தடைபட்டுள்ளது.
டேராடூன் அருகே சஹஸ்திரதரா என்ற புகழ் பெற்ற சுற்றுலா தலத்தில் திடீரென்று மேகவெடிப்பு ஏற்பட்டது.
இதனால், கடைகளும், ஹோட்டல்களும் பாதிப்படைந்துள்ளன.
கார்லிகட் மற்றும் மஜ்ஜியார் கிராமங்களில் மண்சரிவும் சேர்ந்து ஏற்பட்டதில் பலர் சிக்கி கொண்டுள்ளனர்.
ஆசன் ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் உழவு இயந்திரம் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது.
இதில் சிக்கி 5 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளார்கள். தொழிலாளர்கள் 8 பேர் காணாமல் போயுள்ளனர்.
அவர்களை தேடும் பணியும் நடந்து வருகிறது. இளைஞர் ஒருவர் மீது பாறாங்கல் உருண்டு விழுந்ததில், மோட்டார் சைக்கிள் சேர்ந்து நசுங்கி அவர் உயிரிழந்துள்ளார்.
மண்சரிவில் ஒருவரும், டான்ஸ் ஆற்றின் வெள்ளத்தில் 3 பேரும் சிக்கி உயிரிழந்துள்ளார்கள்.
கடும்மழையால், வகுப்பறை சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதுபோன்று உத்தரகாண்டில் திடீர் மேகவெடிப்பு, கடும் மழை மற்றும் மண்சரிவில் சிக்கி மொத்தம் 15 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.