ஒட்டு மொத்த அரச ஊழியர்களும் கூடிய சதவீதத்தில் இந்த அரசாங்கத்திற்கு தமது வாக்குகளையளித்தனர்.
நாட்டின் மதிப்புமிக்க வளமாக காணப்படும் 14 இலட்சம் முதல் 15 இலட்சம் வரையிலான அரச ஊழியர்கள் இந்த அரசாங்கத்திற்கு வழங்கிய ஆணை தொடர்பில் அரச ஊழியர்கள் தற்சமயம் திருப்தி அடைகிறாரா என்ற விடயத்தில் பிரச்சினை காணப்படுகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மின்சாரத் துறையை மறுசீரமைப்புச் செய்வதாக கூறி, இன்று 23,000 ஊழியர்களை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளனர்.
மின்சாரத் துறையில் மின்சார உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகத் துறைகளில் பெரிய அளவிலான மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டு, புதிய போட்டி தன்மை வாய்ந்த கட்டமைப்பை நோக்கி நகர்வது அவசியமாக அமைந்து காணப்பட்டாலும், இந்த 23,000 தொழிலாளர்களுக்கும் தொழில் பாதுகாப்பையும் சமூகப் பாதுகாப்பையும் உறுதி செய்யப்பட வேண்டும்.
தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு உதவிய மின்சார சபை ஊழியர்களை இந்த அரசாங்கம் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மின்சார சபை ஊழியர்களை வீதிக்குக் கொண்டு வந்து, முந்தைய அரசுகளை அசௌகரியங்களுக்கு ஆளாக்கி, அரச ஊழியர்களின் உதவியுடன் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு, இன்று மின்சாரத் துறையில் பணிபுரியும் 23,000 அரச ஊழியர்களை மறந்துவிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மின்சாரத் துறையில் பணி புரியும் ஊழியர்கள் இப்போது தாமாக முன்வந்து ஓய்வு பெறலாம் என்றும் மின்சக்தி அமைச்சர் தெரிவித்தார்.
இன்று, கடுவலை நகர சபை தவிசாளர் அப்போது மின்சார சபையின் தொழிற்சங்கத் தலைவராக செயற்பட்டார். மின்சாரத் துறையில் உள்ள ஊழியர்களை தவறாக வழிநடத்தி, வீதிக்கு இறங்க வழிவகுத்து, அதன் விளைவாக, கடுவலை தவிசாளரான நபர் தவிசாளர் பதவிக்கு வந்ததன் பிற்பாடு அவரும் மின்சார சபை ஊழியர்களை மறந்து விட்டு, அவர்களை ஆபத்தில் சிக்க வைத்துள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராயும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் நடமாடும் சேவை வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வரும் சந்தர்ப்பத்தில், திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து இம்முறை புதிதாக உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவான உறுப்பினர்களுடனான இன்றைய சந்திப்பின் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
IMF பிரதிநிதிகளை சந்தித்தபோது, SJB-யைச் சேர்ந்த நாம் மாத்திரமே மின்சார சபை ஊழியர்கள் தொடர்பில் பேசினோம்.
அரச ஊழியர்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி, அவர்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு, வாக்களித்த அரச ஊழியர்களை இந்த அரசாங்கம் முற்றிலுமாக கைவிட்டுள்ளது.
அண்மையில், IMF பிரதிநிதிகள் பாராளுமன்றத்திற்கு வருகை தந்து மின்சாரத் துறையினர் குறித்து கலந்துரையாடிய போது, ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமே இந்த 23,000 ஊழியர்கள் தொடர்பில் பேசியது.
ஏனைய கட்சிகள் மௌனம் காத்துக் கொண்டிருந்த நிலையில், மின்சாரத் சபை ஊழியர்களின் உரிமைகள் குறித்து ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமே தமது நிலைப்பாட்டை எடுத்துரைத்து பேசியது என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
மின்சார சபை ஊழியர்களைப் பாதுகாத்துக் கொண்டே மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
23,000 தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு, அவர்களினது தொழில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின்னரே, இந்த மறுசீரமைப்பு நடவடிக்கை முன்னெடுத்திருக்கப்பட வேண்டும். இவர்களினது தொழில் பாதுகாப்பு தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியே நேரடியாக சர்வதேச நாணய நிதியத்திடம் தெரிவித்தது.
தேர்தல் மேடையில் இருந்து கொண்டு அரச ஊழியர்களின் உரிமைகள் குறித்து வீராப்புப் பேசிய ஜே.வி.பினருக்கு இன்று அவர்களின் உரிமைகள் குறித்துப் பேச முதுகெலும்பில்லை. தற்போது உண்மை வெற்றி பெற்றுள்ளது. சொல்வதைச் செய்யும், சொன்னதைச் செய்யும் ஒரு கட்சியாக இன்று ஐக்கிய மக்கள் சக்தியே காணப்படுகின்றது என என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தல் மூலம் ஆளும் தரப்புக்கு நாமெல்லோரும் இணைந்து பாடமொன்றைப் புகட்டுவோம்.
மக்களையும், அரச ஊழியர்களையும் ஏமாற்றிய இந்த அரசாங்கத்திற்கு, எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் சரியான பாடம் கற்பிக்குமாறு நான் சகலரையும் கேட்டுக்கொள்கிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.