வகைப்படுத்தப்படாத

ஆப்கானிஸ்தானில் ராணுவ கல்லூரியில் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல்

(UTV|AFGHANISTAN)-ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நேற்று முன்தினம் வெடிகுண்டு நிரப்பப்பட்ட ஆம்புலன்சை வெடிக்க செய்து தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அதில் 103 பேர் உயிரிழந்தனர். 250 பேர் காயம் அடைந்தனர்.

இக்கொடூர சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் காபூலில் இன்று தீவிரவாதிகள் மீண்டும் ஒரு தாக்குதலை நடத்தியுள்ளனர். தலைநகர் காபூலில் மையப்பகுதியில் மார்‌ஷல் யாகிம் ராணுவ பயிற்சி கல்லூரி உள்ளது. இங்கு ராணுவ உயர் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இது பலத்த பாதுகாப்பு மிகுந்த பகுதி.

இருந்தும் இன்று காலை 5 மணியளவில் அங்கு தீவிரவாதிகள் சிலர் பாதுகாப்பையும் மீறி உள்ளே புகுந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். கையெறிகுண்டுகளும் வீசப்பட்டன.

அதை தொடர்ந்து தீவிரவாதிகள் மீது ராணுவம் திருப்பி சுட்டது. இதனால் 2 தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதற்கிடையே ராணுவ பயிற்சி கல்லூரியின் வாயில்கள் மூடப்பட்டன.

கல்லூரியை சுற்றியுள்ள ரோடுகள் அனைத்தும் மூடப்பட்டன. அப்பகுதி முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. ராணுவ பயிற்சி கல்லூரிக்குள் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடைபெறுகிறது.

இதில் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டதாக ராணுவம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் உள்ளே எத்தனை தீவிரவாதிகள் நுழைந்துள்ளனர். துப்பாக்கி சண்டையில் பலியான ராணுவவீரர்கள் எத்தனை பேர் என்பன போன்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. ராணுவ பயிற்சி கல்லூரிக்குள் தொடர்ந்து சண்டை நடைபெறுவதால் அப்பகுதியில் தொடர்ந்து பதட்டமும், பரபரப்பும் நிலவுகிறது. இதற்கிடையே ராணுவ பயிற்சி கல்லூரிக்குள் தாக்குதல் நடத்திய தீவிரவாதி கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்பு கடந்த ஆண்டு அக்டோபரில் இதே ராணுவ பயிற்சி கல்லூரி வெளியே தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். அதில் 15 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

 

 

 

 

Related posts

சிம்பாப்வேயின் புதிய ஜனாதிபதியாக எமர்சன் இன்று பதவிப் பிரமாணம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரின் மனு நிராகரிப்பு…

Sri Lanka’s Kumar Dharmasena, Ranjan Madugalle named Officials for World Cup Final