புதிய கல்வி சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதற்காக ஆசிரியர், அதிபர் இடமாற்றங்கள் சரியான முறையில் நடைபெற வேண்டும் என்றும், மாகாண மற்றும் மத்திய அரசுக்கிடையில் சரியான ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ள புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பாக மாகாண, வலய மற்றும் கோட்ட மட்ட கல்வி மற்றும் நிர்வாக அதிகாரிகளை தெளிவுபடுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட தெளிவூட்டல் கலந்துரையாடல் தொடரின் முதல் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்று நேற்று (12) வட மத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
புதிய கல்வி சீர்திருத்தத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் பாடத்திட்ட திருத்தங்கள், கணிப்பீடு மற்றும் மதிப்பீட்டு செயன்முறைகள், அடிப்படை வசதிகள் மேம்பாடு, ஆசிரியர் அதிபர் மற்றும் கல்வி நிர்வாக வெற்றிடங்களைக் குறைத்தல், மாகாண சபைகள் மற்றும் மத்திய அரசுக்கிடையில் சரியான ஒருங்கிணைப்பை மேற்கொள்ளல், மாகாண சபை அளவில் இருக்கும் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு அவற்றிற்கு விரைவான தீர்வுகள் வழங்குதல் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.
இங்கு கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,
தற்போதுள்ள கல்வி முறை மாற்றப்பட வேண்டும் என்பதை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்கிறோம், அதற்காக இந்த சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக தற்போது இருக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும், அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும், நிர்வாக கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும், டிஜிட்டல்மயமாக்கலையும் மேற்கொள்ள வேண்டும்.
மிக முக்கியமாக இந்த சீர்திருத்தத்தை தனித்தனியாகப் பார்க்க வேண்டாம், ஒட்டுமொத்த செயன்முறையிலும், அமைப்பிலும் இங்கு சீர்திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. எப்போதும் இந்த நாடு வளர்ச்சியடைந்துவரும் நாடு என்று மட்டும் கூறினால் போதாது, அந்த முறையை மாற்ற வேண்டும். அதை நாம் தான் செய்ய வேண்டும். இதனை மாற்ற வேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது. அதற்காக ஆசிரியர்கள் மட்டுமல்ல நிர்வாக துறையினர், பெற்றோர்கள் உட்பட அனைவரும் ஈடுபட வேண்டும். இந்த சீர்திருத்தத்தைப் பற்றி சரியாக அறிந்து கொள்ள வேண்டும்.
பிள்ளைகள் பாடசாலையில் இருந்து வெளியேறும் போது பல்கலைக்கழகம், உயர்கல்வி அல்லது தொழில்நுட்பக் கல்வி மூலம் முன்னேறிச் செல்ல இதன் மூலம் வழியமைக்கப்படுகிறது. நாட்டை முன்னேற்ற வேண்டுமானால் கட்டாயமாக கல்வியில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். அதேபோல் இந்த செயன்முறையில் அரச சேவைக்குரிய இடமாற்றங்களை சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும். ஆசிரியர், அதிபர்களின் இடமாற்றங்களைச் சரியான முறையில் சமப்படுத்த வேண்டும்.
மாகாண அளவில் ஆசிரியர் அதிபர் பிரச்சினைகளைத் தீர்க்க தேவையான நடவடிக்கைகளை மாகாண சபை மூலம் விரைவாக மேற்கொள்ள வேண்டும். அதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய சுற்றறிக்கைகள் மற்றும் சட்ட திருத்தங்களை அமைச்சு மூலம் மேற்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். தேசிய பாடசாலைகள், மாகாண பாடசாலைகள் என பிரித்துப் பார்க்க வேண்டாம். அனைத்து பாடசாலைகளும் நமதே, நமது பிள்ளைகள் தான் இருக்கிறார்கள்.
தற்போது பாடசாலைகளில் இருக்கும் பிள்ளைகளுக்கு நாம் பொறுப்புகூற வேண்டும், அதற்காக பாடசாலைகளின் நிலைமையை சரி செய்து கொள்ள வேண்டும். பிரச்சினைகளைத் தீர்க்க நாம் இணங்கி வேலை செய்வோம்.
அரசாங்கம் என்ற வகையில் கல்வி சீர்திருத்தத்திற்கு நாம் விசேட கவனம் செலுத்தியுள்ளோம். குறிப்பாக கல்விக்காக ,மனித வளத்தை மேம்படுத்த, அடிப்படை வசதிகளை மேம்படுத்த தேவையான நிதி வசதிகளை வழங்குவேன் என்று ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
நமக்கு இருப்பது இந்த பிரச்சினைகளைத் தீர்த்துக்கொண்டு புதிய கல்வி சீர்திருத்தத்தை மேற்கொள்வதுதான். முதல் ஆண்டு நமக்கு கடினமாக இருக்கும் ஆனால் மூன்று நான்கு ஆண்டுகள் செல்லும்போது எளிதாக செய்ய முடியும்.
மாகாண அளவில் இந்த செயன்முறையை முன்னெடுக்கும் போது இருக்கும் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு இந்த கலந்துரையாடல் முக்கியமானது . நம் பிள்ளைகளுக்காக இந்த மாற்றத்திற்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள். மேலும்
குறிப்பாக ,வட மத்திய மாகாணத்தில் இருக்கும் ஆசிரியர், அதிபர் பிரச்சினையை அடுத்த மூன்று மாதங்களிற்குள் தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.