அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்புக்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
அறிக்கையொன்றை வௌியிட்டு நலன்புரி நன்மைகள் சபை இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
தகவல் புதுப்பிப்புக்காக இந்த மாதம் 10 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், நாட்டில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக அதனை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவுசெய்து தற்போது கொடுப்பனவுகளைப் பெறும் மற்றும் பெறாத குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் இந்த புதுப்பிப்பை மேற்கொள்ள வேண்டும் என நலன்புரி நன்மைகள் சபை குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும் 2024 ஆம் ஆண்டில் மனக்குறைகளை தெரிவித்த விண்ணப்பதாரர்களுக்குத் தகவல்களை புதுப்பிக்க வேண்டிய கட்டாயமில்லை என்றும், அதற்குக் காரணம், அந்த விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே தகவல் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
மேலும், தகவல்களை மீண்டும் உறுதிப்படுத்தும் போது, குடும்ப உறுப்பினர்களின் தேசிய அடையாள அட்டை மற்றும் செயற்படக் கூடிய கையடக்கத் தொலைபேசி இலக்கம் என்பன இருப்பது அத்தியாவசியமாகும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இணைய இணைப்புள்ள கணினி அல்லது ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி மூலம் https://eservices.wbb.gov.lk என்ற இணைய முகவரிக்குச் சென்று, QRதாளில் குறிப்பிடப்பட்டுள்ள தமது HH இலக்கம் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பயன்படுத்தித் தகவல் முறைமைக்குள் உட்பிரவேசித்து, தகவல் உறுதிப்படுத்தல் மெனுவிற்குச் சென்று குடும்பத் தகவல்களை உள்ளிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
