அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டின் (Samantha Joy Mostyn) இன்று (07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தினார்.
அவுஸ்திரேலியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான 75 ஆண்டுகளுக்கும் மேலான நட்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், இரு நாடுகளின் பரஸ்பர நன்மைக்காக தற்போதுள்ள ஒத்துழைப்புத் துறைகளை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டன.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தெளிவான தலைமையின் கீழ் வெற்றிகரமான பயணத்திற்கு அவுஸ்திரேலியா தொடர்ந்து ஆதரவை வழங்க தயாராக உள்ளது என்று அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டின் வலியுறுத்தினார்.
குறிப்பாக இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த தேவையான ஆதரவை வழங்க அவுஸ்திரேலியா தயாராக உள்ளது என்று ஆளுநர் நாயகம் வலியுறுத்தினார்.
சுனாமி பேரழிவு மற்றும் இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியின் போது அவுஸ்திரேலிய அரசாங்கம் நேரடியாகவும், சர்வதேச நிறுவனங்கள் மூலமாகவும் வழங்கிய ஆதரவை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இந்தப் பயணம் அவுஸ்திரேலியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நட்பை மேலும் வலுப்படுத்தும் என்று தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதாரம், கல்வி, பாதுகாப்பு, சுற்றுலா மற்றும் கடல்சார் விவகாரங்களில் அவுஸ்திரேலியாவிடமிருந்து கிடைத்த ஆதரவையும் இங்கு ஜனாதிபதி பாராட்டினார்.
அதிக எண்ணிக்கையிலான இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் தொழில் பயிற்சிக்கான மையமாக அவுஸ்திரேலியா மாறியுள்ளது என்று கூறிய ஜனாதிபதி, இந்த துறைகளில் அவுஸ்திரேலியாவின் அனுபவங்களிலிருந்து இலங்கை அதிகம் கற்றுக்கொள்ள முடியும் என்றும், அந்த அனுபவங்களை வெற்றிகரமாக பகிர்ந்து கொள்ள இலங்கை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
அவுஸ்திரேலிய முதலீட்டாளர்களுக்கு இலங்கையில் மிகவும் சாதகமான சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று (06) பிற்பகல் இலங்கைக்கு வருகை தந்த அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் செய்ய உள்ளதோடு பண்டாரகம, மிரிஸ்ஸ மற்றும் வெலிகம போன்ற பகுதிகளில் அவுஸ்திரேலியாவின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும் பல திட்டங்களைக் கண்காணிக்க உள்ளார்.
தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே ஆகியோருடன் அவுஸ்திரேலிய பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.