ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து ஏற்பட்ட சுனாமி அலைகள் அலஸ்கா மற்றும் அமெரிக்காவின் ஹவாய் தீவுகளுக்குள் நுழைந்துள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹவாய், ஓஹு தீவின் கடற்கரையில் உள்ள ஹலீவாவில் நீர்மட்டம் 4 அடிக்கு மேல் உயர்ந்துள்ளதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹவாய் மாநிலம், அலஸ்காவின் அலூடியன் தீவுகளின் சில பகுதிகள் மற்றும் வடக்கு கலிபோர்னியாவின் சில பகுதிகள் ஏற்கனவே சுனாமி எச்சரிக்கையின் கீழ் உள்ளதுடன், அமெரிக்காவின் மேற்கு கடற்கரைக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுனாமி அலைகள் ஏற்கனவே அலாஸ்காவிற்குள் நுழைந்துவிட்டதாகவும், சுனாமி அலைகள் ஹவாய் தீவுகளையும் அடையத் தொடங்கியுள்ளதாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த சில மணி நேரத்தில் மேற்கு அமெரிக்காவின் பிற மாநிலங்களையும் சுனாமி அலைகள் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக மக்கள் ஏற்கனவே தயாராகி வருவதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் பல பகுதிகளுக்கு சுனாமி அலைகள் அண்மிக்கும் நேரங்களை அறிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி இரவு 11:35 மணிக்கு ஓரிகான் மற்றும் வொஷிங்டனையும், இரவு 11:50 மணிக்கு கலிபோர்னியாவையும், அதிகாலை 12:40 மணிக்கு சென் பிரான்சிஸ்கோ விரிகுடா மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் துறைமுகத்தையும் சுனாமி அலைகள் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்திற்கு அருகே பசிபிக் பெருங்கடலைத் தாக்கிய 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக ரஷ்யா மற்றும் ஜப்பானிலும் சுனாமி தாக்கியுள்ளது.
இது வரலாற்றில் ஆறாவது பெரிய நிலநடுக்கம் என்று கூறப்படுகிறது.
இருப்பினும், சாத்தியமான உயிரிழப்புகளைக் குறைக்கும் நம்பிக்கையில், அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வசிக்கும் 2,000 க்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்ற ரஷ்யா முன்னர் நடவடிக்கை எடுத்திருந்தது.
ரஷ்யாவின் கிழக்கு நகரங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலர் காயமடைந்துள்ள போதிலும் இதுவரை எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை.
இதற்கிடையில், வடக்கு ஜப்பானின் கிழக்குப் பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அதே நேரத்தில், ஹொக்கைடோ நகருக்கு அருகிலுள்ள கடலோரப் பகுதியையும் ஒரு அடி உயரத்திற்கு அலைகள் பாதித்தன.
தற்போதைய ஆபத்தை கருத்தில் கொண்டு, 2011 ஜப்பானிய நிலநடுக்கும் மற்றும் சுனாமியிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களைப் பின்பற்றி, ஜப்பானில் உள்ள அதிகாரிகள் புகுஷிமா டாய்ச்சி அணுமின் நிலையங்களில் இருந்து ஊழியர்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர்.
அத்துடன் சீனா, பெரு மற்றும் ஈக்குவாடோர் ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ள அதேநேரம், அமெரிக்காவின் மேற்கு கடற்கரை, அமெரிக்காவிற்கு சொந்தமான குவாம் மற்றும் மைக்ரோனேஷியாவின் சில தீவுகள் ஆகியவை பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசிய மக்களும் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.