பௌதீக ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் சிதைந்துபோன அரச கட்டமைப்பு தொடர்பில் சுயவிமர்சனம் செய்து, நவீன அரச சேவையை உருவாக்க அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதிஒதுக்கீடு செய்யப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
அரச சேவையை நவீனத்துவ கலாச்சாரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும், அதைப் பாதுகாக்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் குறிப்பிட்டார்.
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், அதன் பௌதீக வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் சிதைந்துபோன அரச சேவையை நவீனமயமாக்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
அலரி மாளிகையில் இன்று (05) நடைபெற்ற இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் (SASA) 41 ஆவது வருடாந்த மாநாட்டில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் 41 ஆவது வருடாந்த மாநாடு ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க தலைமையில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி சந்தன அபேரத்ன ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்றது.
இலங்கை நிர்வாக சேவை சங்கம் என்பது, அரச சேவையின் முதன்மையான நாடளாவிய சேவையான இலங்கை நிர்வாக சேவையின் அதிகாரிகளைக் கொண்ட ஒரு தொழில்சார் அமைப்பாகும். இம்முறை அதன் வருடாந்த மாநாடு 05 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அரச சேவையை வலுப்படுத்தும் வகையில், கடந்த வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட சம்பள உயர்வு தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு அடுத்த ஆண்டு சம்பள உயர்வு வழங்குவதற்காக ரூ. 11,000 கோடி ஒதுக்கப்படும் என்றும், 2027 ஆம் ஆண்டுக்கான அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்காக ரூ. 11,000 கோடி ஒதுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி விளக்கினார்.
கவர்ச்சிகரமான அரச சேவையை உருவாக்குவதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும், இதற்காக அரச நிர்வாக அதிகாரிகளின் அர்ப்பணிப்பை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி கூறினார்.
தங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு அரச சேவையிலுள்ள சிறுகுழுவினால் கொடுக்கல் வாங்கலாக மாற்றப்பட்டுள்ளது என்றும், சமூக விழுமியங்களை விட நிதி மதிப்புகளுக்கு முன்னுரிமை அளித்த அரச சேவை அந்த சூழ்நிலையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
குடிமக்கள் மீதான அரச அதிகாரிகளின் பொறுப்பை சுற்றறிக்கைகள் அல்லது கட்டளைகளால் கட்டுப்படுத்த முடியாது என்றும், சமூக மதிப்புகள் மற்றும் சமூக விழுமியங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அதிகாரிகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் கூறிய ஜனாதிபதி, தமக்குக் கிடைத்த பொறுப்பை மற்றவர்களை ஒடுக்குவதற்குப் பயன்படுத்தாமல், சிறந்த அரச சேவையை கட்டியெழுப்புவதற்கும், மக்களுக்கு உயர்தர வாழ்க்கையை வழங்குவதற்கும் பயன்படுத்துவது அரசு அதிகாரிகளின் பொறுப்பாகும் என்று சுட்டிக்காட்டினார்.
அரச சேவை இன்று ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது என்றும், நேரம் எடுத்து தொடர்ந்து முன்னேற முடியும் என்றும், இல்லையெனில், நமது பங்கை சுயமதிப்பீடு செய்து, குடிமக்களின் தேவைகளின் அடிப்படையில் திறமையான சேவையை வழங்குவதற்கான பாதையைத் தேர்வு செய்ய வேண்டிய காலம் கனிந்துள்ளது என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கூறினார்.
புதிய மாற்றத்திற்குத் தேவையான புதிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், குடிமக்கள் விரும்பும் நாட்டை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், சிதைவடைந்த அரசை மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.