அரசாங்க ஊழியர்களின் நல்வாழ்வுக்காக “ஆரோக்கியா” நடமாடும் மருத்துவ முகாம் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் கம்பஹா மாவட்டத்தை மையமாகக் கொண்டு புதன்கிழமை (10) ஜா-எல பகுதியில் இடம்பெற்றது.
அரச ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் நல்வாழ்வுக்காக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் புதிய திட்டத்தின் கீழ் நடத்தப்படும் “ஆரோக்கியா” நடமாடும் மருத்துவ முகாம் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு ஜா-எல பகுதியில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.
கம்பஹா மாவட்டத்தில் உள்ள அனைத்து பொலிஸ் பிரிவுகளையும் மையமாகக் கொண்டு, இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
“ஆரோக்கியமான நாட்டிற்கு ‘ஹெல்த்தி ஸ்ரீலங்கா’ ” என்னும் கருப்பொருளுக்கமைய நடைபெற்ற இந்த “ஆரோக்கியா” நடமாடும் மருத்துவ முகாமில் களணி, கம்பஹா மற்றும் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுகளின் கீழ் உள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் சுமார் 600 மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் பங்கேற்றனர்.
இதன்போது அடையாளம் காணப்பட்ட நோயாளிகள் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலைகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டனர்.
மேலும் கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் நீர்கொழும்பு வைத்தியசாலை உள்ளிட்ட வைத்தியசாலைகளைச் சேர்ந்த வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர் மற்றும் பிற ஊழியர்களின் பங்கேற்புடன் நடமாடும் மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துக் கொண்ட சுகாதார மற்றும் வெகுசன ஊடக உரையாற்றுகையில்,
இது சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சால் ஆரம்பிக்கப்பட்ட “ஆரோக்கியா” நடமாடும் மருத்துவ முகாமின் மற்றுமொரு புதிய திட்டமாகும், “ஆரோக்கியமான இலங்கை” என்ற கருப்பொருளின் கீழ் தொடர்ந்து செயல்பட எதிர்பார்த்துள்ளோம்.
நாட்டின் அனைத்து மக்களும் ஆரோக்கியமாக வாழ உகந்த சுகாதார சேவைகளை வழங்குவது அவசியம்.
“ஆரோக்கியா” நடமாடும் மருத்துவ முகாம் திட்டத்தை, ஆரோக்கியமான நாட்டிற்கான ஒரு அம்சமாக சுட்டிக்காட்ட முடியும். தூர பிரதேசங்களிலும், பின்தங்கிய பகுதிகளிலும் உள்ள மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக இந்த மருத்துவ முகாம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அரச ஊழியர்களுக்கான “ஆரோக்கியா” திட்டம் இன்று பொலிஸ் உத்தியோகத்தர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள சுமார் 1.6 மில்லியன் அரச ஊழியர்களில் சுமார் 84 ஆயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்களாக கடமையாற்கின்றனர்.
ஆகையால் அவர்களுக்கு அதிகளவான பொறுப்புள்ளது. அவ்வாறான பொலிஸ் உத்தியோகத்தர்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது அவசியம்.
மேலும் நாட்டில் உள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களில் 30 சதவீதமானோர் தொற்றா நோய்களால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
அதேபோல் சேவையில் ஈடுபடும் போது தொற்றா நோயால் உயிரிழக்கும் ஊழியர்களில் அதிகளவானோர் பொலிஸ் உத்தியோகத்தர்களாவர்.
ஆரோக்கியமான நாட்டிற்கான இத்திட்டத்தின் முதியோர்களின் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதும், தொற்றா நோய்களை எதிர்கொள்வதும் கட்டுப்படுத்துவதும் இரு பிரதான குறிக்கோள்கள்களாகும்.
மருத்துவ முகாம்களின் மூலம் நோயாளிகளை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு சிகிச்சை அளிப்பதுடன், மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலைகளுக்கும் அனுப்பிவைக்கப்படுகின்றனர் என்றார்.
