கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம் குறித்து ஆராயும்போது அதற்காகக் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தம் புதிதாக நுழைவதற்கு அங்கீகரிக்கப்பட்ட நபர்களின் ஊழியர்களுக்கான வருமான வரி விலக்களிப்புக்களை கட்டுப்படுத்துகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
எனினும், ஏற்கனவே உள்ள நிறுவனங்களுக்கு நிலைமாற்று காலமாக 3 வருடங்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் நேற்று (06) பாராளுமன்றத்தில் கூடியபோது இவ்விடயம் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
திருத்தம் கொண்டுவரப்படுவதன் நோக்கம் குறிப்பாக புதிய அதிகாரமளிக்கப்பட்ட ஆளொருவரின் ஊழியரொருவருக்கான வருமான வரி விலக்களிப்பை நீக்கும் அதேவேளை, ஏற்கனவே உள்ள நிறுவனங்களின் ஊழியர்களுக்கு நிலைமாற்று காலத்தை வழங்குவது உள்ளிட்ட விடயங்கள் குறித்து குழு விளக்கம் கோரியது.
அத்துடன், முதலீட்டாளர்களின் முன்கூட்டிய செலவுகளைக் குறைக்கும் நோக்கில் பதிவுச்சான்றிதழொன்று வழங்கப்படும்வரை விண்ணப்பக் கட்டணம் மற்றும் ஏனைய கட்டணங்களில் ஏற்படுத்தப்படவுள்ள மாற்றங்கள், திருத்தப்பட்ட கட்டமைப்பு போட்டித்தன்மையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும் என்ற உத்தரவாதம் என்பன குறித்தும் குழு ஆராய்ந்தது.
அத்துடன், 1972ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு இணங்கும் வகையில் வெளிநாட்டுச் செலாவணி அமைவது குறித்துக் கேள்வியெழுப்பிய குழு, இலங்கை ரூபாயினால் ஈட்டப்படும் வருமானம், நாணய மாற்று மற்றும் தேசிய நாணய, நிதி ஒழுங்குவிதிகளுக்கு அமைய தொடர்ச்சியாக அவை பேணப்படுவதன் அவசியத்தையும் வலியுறுத்தியது.
துறைமுக நகரத்தில் கடல்கடந்த வங்கிச் செயல்பாடுகளுக்கும் உள்நாட்டு வங்கிச் செயல்பாடுகளுக்கும் இடையிலான வேறுபாடுகள் மற்றும் ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வை ஆகியவற்றில் குழு கவனம் செலுத்தியது.
சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப மூலதனம், பணப்புழக்கம் மற்றும் நிர்வாகம் உள்ளிட்ட மத்திய வங்கியின் மேம்படுத்தப்பட்ட மேற்பார்வை செய்யும் அதன் வகிபாகம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
துறைமுக நகரத்திற்குள் உள்ள அளவுகோல்களை பின்பற்றாதது, தொடர்புடைய அபராதங்கள் போன்ற பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது, மேலும் துறைமுக நகரத்தின் செயல்பாடுகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பராமரிக்க கண்காணிப்பு மற்றும் வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளின் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.
இந்தத் திருத்தங்கள் துறைமுக நகர கட்டமைப்பை செயல்படுத்துதல், புதிய வணிக நடவடிக்கைகளுக்கான ஒப்புதல்களை செயல்படுத்துதல் மற்றும் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான நிதி ஒழுக்கம், வெளிப்படைத்தன்மை மற்றும் சர்வதேச உறுதிப்பாடுகளுடன் சமநிலைப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டவை என அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
1969ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெளிநாட்டு நன்கொடையாளர்களால் நன்கொடையாக வழங்கப்படும் நிவாரணப் பொருட்கள், அனர்த்த முகாமைத்துவ நிலையம் அல்லது ஏதேனும் அரச நிறுவனத்தின் பெயரில் பெறப்பட்டு, சரியான நேரத்தில் மற்றும் வினைத்திறனான முறையில் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக இந்த ஒழுங்கு விதிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
போதிய சட்ட ஏற்பாடுகள் காணப்படும் நிலையில் அனர்த்த முகாமைத்துவ நிதியை உருவாக்கத் தவறியமை குறித்தும் குழு நிதி அமைச்சின் அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பியது.
மேலும் தாமதங்களினால் ஏற்படக்கூடிய சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, ““Rebuilding Sri Lanka Fund” நிதியத்தை சட்டப்பூர்வ நிதியமாக நிறுவுவதன் முக்கியத்துவத்தை குழு வலியுறுத்தியது.
அதன்படி, இது தொடர்பாக தேவையான நடவடிக்கை எடுக்குமாறு நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு குழு அறிவுறுத்தியது.
நீண்ட கலந்துரையாடலைத் தொடர்ந்து கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம் மற்றும் 1969ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளுக்கு குழு அங்கீகாரம் வழங்கியது.
இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, (கலாநிதி) கௌசல்யா ஆரியரத்ன, நிஷாந்த ஜயவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, (சட்டத்தரணி) ரவூப் ஹக்கீம், நிமல் பலிஹேன, விஜேசிறி பஸ்நாயக்க, திலின சமரக்கோன், சம்பிக்க ஹெட்டிஆரச்சி, சுனில் ராஜபக்ஷ, அஜித் அகலகட மற்றும் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.
