தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் புதிய மின்சாரக் கொள்கையை விமர்சித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, வீதி விளக்குகளுக்காக நுகர்வோரிடம் கட்டணம் வசூலிக்கும் முன்மொழிவுகளும், ஒரு அலகுக்கு 67 ரூபாய் வசூலிக்கும் நேர அடிப்படையிலான (time-use) முறையும் முற்றிலும் நியாயமற்றவை எனக் கூறியுள்ளார்.
இது குறித்து ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,
இக்கொள்கையானது நுகர்வோரையும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையையும் தண்டிப்பதோடு, குறைந்த வருமானம் பெறுவோரை விகிதாசாரத்திற்கு அப்பாற்பட்ட வகையில் பாதிப்பதாக எச்சரித்துள்ளார்.
வீதி விளக்குகளுக்கான கட்டணத்தை மக்கள் செலுத்த மறுத்தால், அது சட்டத்தையும் ஒழுங்கையும் பராமரிப்பதில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“பகல் நேர அலகு பயன்பாட்டின் அடிப்படையில் சூரிய சக்தி (solar) உற்பத்தியாளர்களுக்குக் கட்டணம் விதிப்பது போன்ற முன்மொழிவுகள் பொதுமக்களின் ஆலோசனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
அரசாங்கம் வாக்குறுதியளித்தபடி மின்சாரக் கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைப்பதற்குப் பதிலாக, 11.57 சதவீதத்தால் அதிகரித்திருப்பது கண்டிக்கத்தக்கது.
அரசாங்கம் தனது சொல்லுக்கேற்ப செயல்பட வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.
தற்போதைய நிர்வாகம் “பொய்கள் மற்றும் ஏமாற்று வேலைகளில்” ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டிய பிரேமதாச, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைக்கு அதிகபட்ச ஆதரவை வழங்குமாறும், நுகர்வோருக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்
