மகா சங்கத்தினரை இழிவாகவும் கேவலமாகவும் விமர்சித்த அமைச்சர் லால் காந்தவுக்கு எதிராக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காவிடில், அதன் மோசமான விளைவுகளை விரைவில் சந்திக்க நேரிடும் என தேசிய சங்க சம்மேளனத்தின் தலைவர் வணக்கத்திற்குரிய லியன்வல சாஸனரதன தேரர் தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகளுக்கும் மகா சங்கத்தினருக்கும் இடையில் பல்வேறு கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தாலும், நாட்டின் வரலாற்றில் எந்தவொரு அரசியல்வாதியும் மகா சங்கத்தினரை இவ்வாறு தரம் தாழ்ந்த முறையில் அவமதித்ததில்லை என அவர் குறிப்பிட்டார்.
கண்டி, மடவல ஜனமங்கலாராம சர்வதேச பௌத்த மத்திய நிலையத்தில் இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே தேசிய சங்க சம்மேளனத்தின் தலைவர் வணக்கத்திற்குரிய லியன்வல சாஸனரதன தேரர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
“நாட்டைச் சீரழிக்கும் வஞ்சகமான தந்திரோபாய நிகழ்ச்சி நிரல்கள் முன்னெடுக்கப்படுமானால், அவற்றுக்குச் சவால் விடும் உரிமை எமக்கு நிச்சயமாக உண்டு.
அதற்காகவே வரலாற்றிலிருந்தே மகா சங்கத்தினர் குரல் கொடுத்து வருகின்றனர்.
அமைச்சர் லால் காந்த காட்டில் இருக்கும் ஒரு மிருகத்தைப் போன்று வெளியே வந்து, காட்டுமிராண்டித்தனமான, தரம் தாழ்ந்த மற்றும் இழிவானதொரு கூற்றை முன்வைத்துள்ளதை நாம் பார்த்தோம்.
தயவுசெய்து உங்களது கூற்றை மீளப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அந்த அமைச்சருக்குக் கூறிக்கொள்ள விரும்புகிறோம்.
ஏனெனில், அவ்வாறு செய்யாவிடில் இந்த நாடு எத்திசையை நோக்கிச் செல்லும் என்பதை எம்மால் ஊகிக்க முடியாது.
ஜனாதிபதி அவர்களே, இவரை உடனடியாகக் கட்டுப்படுத்தாவிட்டால், இந்த நாடு இதைவிடப் பாரிய ஆபத்தை எதிர்கொள்ளும், அதை யாராலும் தடுக்க முடியாது என நாம் கூறுகிறோம்.
தயவுசெய்து நீங்கள் இந்த கலாசாரத்திற்குள் உங்களை மாற்றிக்கொள்ளாவிட்டால், இந்நாட்டு மக்கள் மிக விரைவில் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.” என்றார்.
