நாட்டில் இந்தளவு பாரிய அழிவு ஏற்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் இன்னும் அவசர அனர்த்த நிலையை பிரகடனப்படுத்தி அறிவிக்காமல் இருப்பது கவலைக்குரிய நிலைமையாகும்.
வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளதன் பிரகாரம் தென்கிழக்கு திசையில் 170 கிலாே மீட்டருக்கு அதிக தாழ் அமுக்க நிலைமை ஏற்பட்டு, அது சுழல் காற்றாக மாறியுள்ள நிலையில், அரசாங்கம் இன்னும் இடர் நிலையாக அறிவிக்காமல் இருக்கிறது.
2025 13 ஆம் இலக்க இலங்கை அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின் 11 ஆம் உறுப்புரையில் அவசர அனர்த்த நிலையை அறிவிப்புச் செய்வதன் மூலம் மிகவும் விரைவாக, இடர் நிலைக்கு ஆனாகும் குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்க முடியும்.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ஆலாேசனை வழங்கி, அனர்த்த நிலையை அறிவிக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
கமத்தொழில், கால்நடைகள், காணி மற்றும் நீர்ப்பாச அமைச்சுக்கான இன்றைய (27) குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரிவித்தபோதும் இதுவரை அதனை மேற்கொள்ளவில்லை என்பதுடன் குறைந்தபட்சம் அரசாங்கத்துக்கு இதுதொடர்பில் இருக்கும் சட்ட திட்டங்கள் தொடர்பில் அறியாமல் இருக்கிறது.
அதேநேரம் சீரற்ற காலநிலை காரணமாக பாரிய அனர்த்தம் ஏற்பட்டு, உயிரிழந்த, இருப்பிடங்களை இழந்த, பாதிப்புகளுக்கு உள்ளான எமது நாட்டின் மக்களுக்கு உதவி, ஒத்தாசைகளை வழங்கும் அரச அதிகாரிகள், பாதுகாப்பு பிரிவினருக்கு எமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை காரணமாக துன்பங்களுக்கு, அழுத்தங்களுக்கு மற்றும் பாதிக்கப்புக்குளாகியுள்ள மக்களுக்கு தேவையான நிவாணங்களை வழங்கி, அவர்களுக்கு ஓரளவு ஆறுதலை வழங்குமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன்.
அதேபோன்று அவசர அனர்த்த நிலையை அறிவிப்புச் செய்து, உயிரிழந்தவர்களுக்கு சொத்துக்களை இழந்தவர்களுக்கு, வாழ்வாதாரங்களை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கும்போது, காலம் கடந்த சுற்று நிருபத்தை நீக்கி, காலத்துக்கு ஏற்றவகையில் அவற்றை செயற்படுத்துமாறும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குமாறும் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம்.
அம்பாறை மாவட்டத்தில் அனர்த்தங்களுக்கு ஆளாகியவர்களுக்கு இன்றுவரை நிவாரணங்கள் இல்லாமையால், தற்போதாவது நிவாரணம் வழங்குமாறும், இந்த அனர்த்த முகாமைத்துவ மற்றும் அனர்த்த முகாமைத்துவ சட்டமும் மாற்றப்பட வேண்டும்.
அனர்த்த முகாமைத்துவ துறையில் பிரச்சினைகள் காணப்படுகின்றன. இந்த பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும்.
அனர்த்தத்துக்கு பின்னரான நடவடிக்கைகள் மந்தநிலை காரணமாக, அரசாங்கம் இது தொடர்பாகவும் தற்போதாவது சிந்திக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
அவசரகால அனர்த்தம் ஏற்பட்டால் முன்கூட்டியே எச்சரிப்பதற்காக, ஜப்பானிய உதவியுடன் புத்தளத்தில் ஸ்தாபிக்கப்பட்ட டாப்ளர் ரேடார் அமைப்பைப் போன்ற ஒரு அமைப்பை பொத்துவில் பகுதியிலும் நிறுவ வேண்டும் என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இதற்காக ஜப்பானுடன் கலந்துரையாடல் நடத்துமாறும் கேட்டுக்கொண்டார்.
இத்தகைய கலந்துரையாடலொன்று முன்னெடுக்கப்பட்டால் எதிர்க்கட்சி தேவையான தலையிட்டைச் செய்யும் என்றும் அவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
