அரசியல்உள்நாடு

அரசாங்கத்துக்கு எதிராக எந்தவொரு சக்தியும் இயங்க முடியாது என்ற நிலைமை தோற்றுவிக்கப்படுகிறது – தயாசிறி ஜயசேகர எம்.பி

எதிர்க்கட்சிகள் சுதந்திரமாக செயற்படக் கூடிய சூழல் இன்று இல்லை. எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்துக்குள் ஒடுக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்துக்கு எதிராக எந்தவொரு சக்தியும் நாட்டில் இயங்க முடியாது என்ற நிலைமையை தோற்றுவித்துக் கொண்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இன்று எதிர்க்கட்சிகள் சுதந்திரமாக செயற்படக் கூடிய சூழல் இல்லை. தற்போது எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் நேரத்தை வீணடிப்பதாகவும், அரசாங்கத்துக்கு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு இடமளிக்கப்படுவதில்லை என்றும் சமூகத்தில் ஒரு நிலைப்பாடு உருவாக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு முன்னர் சிறந்த அரசியல் முதிர்ச்சியுடையவர்கள் சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர்.

ஆனால் தற்போதுள்ள சபாநாயகர் பாராளுமன்றத்தில் எமக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் கருத்துக்களை தெரிவிப்பதற்கு கூட வாய்ப்புக்களை மட்டுப்படுத்தும் ஒருவராகவே காணப்படுகின்றார்.

கடந்த ஆட்சி காலங்களில் ஓராண்டில் மாத்திரம் சுமார் 4000க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால் இன்று அவ்வாறானதொரு நிலைமை இல்லை. வேலை நிறுத்த போராட்டங்களும் முன்னெடுக்கப்படுவதில்லை.

அரசாங்கத்தால் இவை பலவந்தமாகக் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன. இதேபோன்று தான் எதிர்க்கட்சிகளும் பாராளுமன்றத்துக்குள் ஒடுக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்துக்கு எதிராக எந்தவொரு சக்தியும் நாட்டில் இயங்க முடியாது என்ற நிலைமையை தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலைமையை மாற்றியமைப்பதற்கு சகல எதிர்க்கட்சிகளும் கருத்து வேறுபாடுகள், கட்சி வேறுபாடுகளை விடுத்து ஒரே முகாமின் கீழ் இணைந்து செயற்பட வேண்டும்.

2029ஆம் ஆண்டு 30 இலட்சம் இளைஞர், யுவதிகள் புதிய வாக்காளர்களாக தமது முதலாவது வாக்கினை பதிவு செய்யவுள்ளனர்.

அடுத்து ஆட்சியமைக்கவுள்ள குழு என்ற ரீதியில் இந்த இளம் வாக்களார்களை சரியான முறையில் வழிநடத்த வேண்டியது முதலாவது அத்தியாவசிய காரணியாகும்.

ஆனால் தொழிநுட்பத்துடன் ஒருமித்துள்ள அவர்கள் நாம் கூறுவதை எந்தளவுக்கு ஏற்றுக் கொள்வார்கள் என்பது குறித்தும் சிந்திக்க வேண்டும் என்றார்.

-எம்.மனோசித்ரா

Related posts

கல்முனை விடயமாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளரை சந்தித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ்

editor

வயிற்றில் ஆணியுடன் நாட்டுக்கு, திரும்பி வந்த பெண்!

ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை