செவனகல சீனி தொழிற்சாலையில் காணப்படும் இரண்டு இயந்திரங்களில் ஒரு இயந்திரம் கடந்த 4 மாதங்களாக பழுதடைந்து, பழுதுபார்க்கப்படாமல் இருக்கிறது.
தற்போது பயன்பாட்டில் காணப்படும் மோட்டாரும் 35 ஆண்டுகள் பழமையானதாகும்.
எனவே அதன் செயல்திறனும் நிச்சயமற்று காணப்படுகின்றது. உற்பத்திப் பிரிவில் காணப்படும் 4 சீனி உற்பத்தி இயந்திரங்களில் 2 அகற்றப்பட்டதால் உற்பத்தி செயல்முறை பாதிக்கப்பட்டுள்ளது.
இயந்திரங்கள் பழுதடைந்தவுடன், அது பழுதுபார்க்கப்பட்டு உரிய காலத்தில் பயன்பாட்டிற்கு எடுக்கப்படவில்லை.
தற்சமயம் இங்கு உற்பத்தி செய்யப்படும் சீனி மற்றும் எத்தனோல் போன்றவற்றை விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இத்தகைய சூழ்நிலைக்கு மத்தியில், செவனகல மற்றும் பெல்வத்த சீனி உற்பத்தி தொழிற்சாலையில் பணிபுரியும் சகலர்களுக்குமாக, விவசாய சமூகத்தினர் சார்பாக ஐக்கிய மக்கள் சக்தியே உரத்து குரல் எழுப்பியது.
தற்போது ஐக்கிய மக்கள் சக்தியினது குரல் மாத்திரமே காணப்படுகின்றது.
Voice Cut அரசியலில் ஈடுபடாமல், நேர்மையாக இன்னல்கள் துயரங்களை அறிந்து தெளிவான புரிதலைப் பெற்று, இங்கு நிலவும் பிரச்சினைகளை சரியாக அடையாளம் கண்டுள்ளோம்.
இது குறித்த தகவல்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு முன்வைக்கப்படும்போது, அவை கணக்கில் எடுத்துக்கொள்ளாத போக்கை அரசாங்கம் கடைப்பிடித்து வருகிறது.
விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் படும் வலிகள் மற்றும் துன்பங்களை தற்போதைய அரசாங்கம் புரிந்து கொள்வதாக இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
செவனகல சீனி உற்பத்தி தொழிற்சாலைக்கு கரும்பு உற்பத்திச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக இன்று (13) அப்பிரதேசத்துக்கு விஜயம் செய்த போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
தற்போது, செவனகல விவசாயிகளுக்கு ரூ.2050 இலட்சம் செலுத்த வேண்டி காணப்படுகிறது. சேமலாப நிதியத்திற்கு ரூ. 150 இலட்சமும், விநியோகஸ்தர்களுக்கு ரூ. 100 இலட்சமும், பெறுமதி சேர் வரியாக ரூ. 400 இலட்சமும் செலுத்த வேண்டி காணப்படுகின்றது.
கிட்டத்தட்ட 1,400 ஊழியர்களும் 4,500 விவசாயிகளும் இதனால் பயன்பெற்று வருகின்றனர்.
ஆனால் அரசாங்கத்திற்கு இந்த மக்கள் மீது இரக்கம் இல்லை. இந்த விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் பாராளுமன்றத்தில் இருந்து கொண்டு பொய் சொல்லி மோசமான அரசியலில் ஈடுபடக்கூடாது.
திறைசேரியின் அதிகாரிகள் உள்ளிட்ட தரப்புடன் செவனகல மற்றும் பெல்வத்த ஆகிய தொழிற்சாலைக்கு சென்று இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை பெற்றுக் கொடுக்க நடமாடும் சேவையை நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
கடந்த காலங்களில், ரஞ்சித் மத்தும பண்டார தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் மாகாண மற்றும் பிரதேச அரசியல் அதிகார தரப்பால் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்பட்டன. நாம் மக்கள் பிரச்சினையைக் கண்டு ஓடி ஓழியவில்லை.
இன்று இந்த விவசாயிகளும் தொழிலாளர்களும் படும் துயரங்களைக் கேட்க அரசாங்கத்தில் யாரும் இல்லை.
தொழிற்சாலைகளினது தொழிலாளர்களின் தொழிலாளர் உரிமைகள் தொடர்பில் பேசிய தற்போதைய அரசாங்கம், ஆட்சிக்கு வந்தவுடன் இதையெல்லாம் மறந்துவிட்டது.
ஒடுக்கப்பட்ட வர்க்கத்திற்கு, தொழிலாளி வர்க்கத்திற்கு எந்த ஆறுதலும் இல்லை. இந்த வினைத்திறனற்ற இந்த அரசாங்கத்தால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.
சேமலாப நிதிகளைச் செலுத்தாமை, வங்கிக் கடன்களைச் செலுத்தாமை, விவசாயிகள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு பணம் செலுத்தாமை மற்றும் ஊழியர்களின் சம்பளத்தை செலுத்தாமை போன்ற பல பிரச்சினைகள் இங்கு காணப்படுகின்றன.
இந்தப் பிரச்சினைகள் செவனக போலவே பெல்வத்த சீனி உற்பத்தி தொழிற்சாலை இரண்டிலுமே காணப்படுகின்றன.
சமகாலத்தில் இந்தத் தொழிற்சாலைகள் இரண்டும் செயலிழந்து வீழ்ச்சி கண்டு வருகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.