அரசியல்உள்நாடு

அரசாங்கத்தின் வாக்குறுதிகள் காற்றில் பறக்கின்றன – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

தற்போது மக்களின் வாழ்க்கை சீர்குலைந்து, அரசாங்கத்தின் பலவீனங்கள் மற்றும் திறமையின்மை காரணமாக, இந்த அரசாங்கத்தால் நாட்டில் சட்டத்தின் ஆட்சியை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலை காணப்படுகின்றன.

போதைப்பொருள் வியாபாரிகள், கொள்ளையர்கள் மற்றும் கொலைகாரர்கள் இன்று சமூகத்தை தமது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளனர்.

போட்டிக்கு துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்படுகின்றன. தற்போதைய அரசாங்கத்தால் இந்த கொலை கலாச்சாரத்தை நிறுத்த முடியாதுபோயுள்ளது.

இந்த அரசாங்கத்தின் பலவீனம் காரணமாக, போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு கதவுகள் திறந்து விடப்பட்டே உள்ளன.

சமூகத்தில் அச்சம் நிலவுகிறது. மக்களின் வாழ்க்கை முற்றிலுமாக நிச்சயமற்ற நிலைக்கு வந்துள்ளது. ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது.

பேச்சுச் சுதந்திரம் கூட சரியாக இல்லாத நிலை காணப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்திக்கு புதிய அங்கத்தவர்களை இணைத்துக் கொள்ளும் முகமாக மினுவங்கொட ஹல்மடுவ வட்டாரத்தில் மக்கள் சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

தெற்காசிய மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற இருவருக்கு தலா ஒரு இலட்சம் ரூபா பணப் பரிசில்களும் எதிர்க்கட்சித் தலைவரால் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

இப்பிரதேசத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

ஜனநாயகத்தை அழித்து ஒரு கட்சி அரசாங்கத்தை உருவாக்குவதே தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையாக அமைந்து காணப்படுகின்றன.

சமூகத்தின் சகல நிறுவனத்திலும் அமைப்புகளிலும் அதிகாரத்தைப் பெற்றாலும், இன்று சமூகம் போதைப்பொருள் வியாபாரிகளின் பிடியில் சிக்குண்டுள்ளது.

இன்று பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் கூட அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

எனவே நாட்டின் மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

இந்த பாதாள உலகத்தை இல்லாதொழிக்க எதிர்க்கட்சி தனது பூரண ஒத்துழைப்பைப் பெற்றுத் தரும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் இன்று காற்றில் பறக்கின்றன.

தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் இன்று நிறைவேற்றப்படாத நிலையையே பார்க்கிறோம். இதனால் ஒட்டுமொத்த மக்களும் மிகுந்த ஏமாற்றத்தில் இருக்கின்றனர்.

மிக அண்மைய புள்ளிவிவரங்களின்படி, தற்போது பணவீக்கம் அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டுகின்றன.

தேர்தல் காலத்தில், தற்போதைய அரசாங்கம் IMF இணக்கப்பாட்டை மாற்றி புதிய இணக்கப்பாட்டை எட்டுவோம் என வாக்குறுதியளித்திருந்தது.

ஆனால் இன்று தற்போதைய அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி கையெழுத்திட்ட IMF இணக்கப்பாட்டையே பின்பற்றுகின்றது.

மின்சார கட்டணத்தை 33% ஆல் குறைப்பதாகக் கூறிய தற்போதைய அரசாங்கம், மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க அறிவுறுத்தல்களை வழங்கி இருந்தது, ஆனால் எதிர்க்கட்சி எடுத்த நடவடிக்கையால், அந்த முயற்சியை கைவிட வேண்டிய நிலைக்கு அரசாங்கம் வந்தது.

சலுகைகள் எங்கே?

மின்சாரக் கட்டணம் மற்றும் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் விலைக்கு எரிபொருட்கள் மக்களுக்கு வழங்கப்படும் என்றும், எரிபொருள்கள் மீதான வரிகள் நீக்கப்படும் என்றும், இதில் காணப்படும் ஊழல் ஒழிக்கப்படும் என்றும், எரிபொருள் விலைகள் குறைக்கப்படும் என்றும் இந்த அரசாங்கம் தேர்தல் காலத்தில் பல வாக்குறுதிகளை அள்ளிக்கொட்டின.

இன்று நடந்தது ஒன்றுமில்லை. சம்பிரதாய ஆட்சிப்போக்கையே இந்த அரசாங்கமும் பின்தொடர்கிறது. மக்கள் இதை எதிர்பார்க்க வில்லை. புதிய நம்பிக்கை நிறைந்த ஆட்சியை எதிர்பார்த்து பெரும் மாற்றத்தை நாடினர்.

அதில் நம்பிக்கை கொண்டனர். ஆனால் அதனை நிறைவேற்றும் நடவடிக்கையில் ஒரு வருடத்தை கிட்டும் இந்த அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எல்லா இடங்களிலும் பொய்களும் ஏமாற்று வேலைகளும் நடக்கின்றன. தற்போது நாட்டின் சுமார் 50% ஆனோர் ஏழ்மை நிலையை அடைந்துள்ளனர்.

இந்த மக்களை வறுமையிலிருந்து விடுவிக்க எந்த திட்டமும் இல்லை. 2028 முதல் வெளிநாட்டுக் கடனை செலுத்த வேண்டும்.

வெளிநாட்டுக் கடனை செலுத்த வேண்டுமானால், பொருளாதாரம் வலுவாகவும் நிலையானதாகவும் இருக்க வேண்டும். வளர்ச்சி விகிதத்தை பேணிச் செல்ல வேண்டும்.

விரைவான பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டும். வெளிநாட்டு கையிருப்பை அதிகரிக்க வேண்டும். ஆனால், இன்று இது முறையாகவும் இலக்கு வைத்த விதமாகவும் நடந்த பாடில்லை.

அவ்வாறு நடப்பதாக உறுதியான ஏற்பாடுகளையும் நடவடிக்கைகளையும் இந்த அரசாங்கத்தில் காண முடியவில்லை. வரும் 3 ஆண்டுகளில் கூடிய பொருளாதார வளர்ச்சி விகிதம் எட்டப்பட்டால், 2028 இல் எம்மால் கடனை திருப்பிச் செலுத்தலாம். இல்லையெனில் மீண்டும் ஒருமுறை நாம் வங்குரோத்து நிலையைச் சந்திப்போம்.

இரண்டாம் கட்ட மீண்டுமொரு சர்வதேச நாணய நிதிய வேலைத்திட்டத்தை நாட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம்.

இந்நிலை ஏற்படாதிருக்க உறுதியான நிலைப்பாட்டில் இருந்து கொண்டு பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கிப் பயணித்தே ஆக வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

Related posts

வெடுக்குநாறி சிவராத்திரி சம்பவம்: 08 பேர் நீதிமன்றில் ஆஜர்

புதிய இராணுவத் தளபதி கடமைகளை பொறுப்பேற்றார்

மர்ஹும் அஷ்ரஃபுக்கு அஞ்சலி செலுத்திய காரைதீவு பிரதேச சபை!

editor